வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்..!
மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்திலும் விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 262 விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு சுழற்சி முறையில் 130 இன்று மீன்பிடிக்க சென்றன. மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சிமுறையில் 130 விசைப்படகுகள் இன்றும் 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்ல முடிவு செய்ததின் அடிப்படையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
பின்னர் இதுகுறித்து மீனவர் சுஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித் தடை காலத்திற்கு முன்பாக இரண்டு மாதங்களாக மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தொழிலுக்கு செல்வதாக குறிப்பிட்டார். அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சந்தோசமாக கடலுக்கு செல்வதாக குறிப்பிட்டார். முதல் நாளான இன்று விசைப்படகு கடலுக்கு செல்வதை வரவேற்கும் வகையில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் மீனவர்கள் வானவேடிக்கை நடத்தினார்கள் தொடர்ந்து மீன் பிடிக்க விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்