Thoothukudi: சாதி பெயரிலான தெருக்கள் இல்லாத மாவட்டமாகிறது தூத்துக்குடி- ஆட்சியரின் முயற்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முழு ஆதரவு
கடந்த 2 மாதங்களில் மாவட்டம் முழுவதும் 6,624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சாதி பெயரிலான தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட்டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள சாதி பெயரிலான 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சாதி ரீதியான மோதல் காரணமாக வெட்டப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சாதிய மோதல்களை தடுக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள சாதி ரீதியான அடையாளங்களை, பொதுமக்களின் உதவியோடு அகற்றும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் களம் இறங்கியது. இதன் முதல் நடவடிக்கையாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாதி பெயரிலான தெருக்களின் பெயர்களை மாற்ற பரிந்துரை செய்தார். இதனை மேல ஆத்தூர் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மேல ஆத்தூர் ஊராட்சியில் சாதி பெயரில் இருந்த 9 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 9 தெருக்களின் பெயர்களும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன.
இதேபோல் காவல் துறை சார்பில் பொது இடங்களில் உள்ள சாதிய ரீதியிலான அடையாளங்கள் பொதுமக்கள் உதவியோடு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கடந்த 2 மாதங்களில் மாவட்டம் முழுவதும் 6,624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர் நடவடிக்கையாக மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சாதி பெயரிலான தெருக்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஊராட்சி தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டுகோளை தற்போது மேலும் 33 ஊராட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 ஊராட்சிகளில் சாதி பெயர்களில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஒன்றியத்தில் வர்த்தகரெட்டிபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, அல்லிகுளம், கோரம்பள்ளம், தெற்கு சிலுக்கன்பட்டி, கருங்குளம் ஒன்றியத்தில் கொங்கராயகுறிச்சி, கலியாவூர், வைகுண்டம் ஒன்றியத்தில் அணியாபரநல்லூர், இடையர்காடு, சூளைவாய்க்கால், அகரம், மாரமங்கலம், ஆழ்வார்திருநகரி ஒன்றியதத்தில் அங்கமங்கலம், கடையனோடை, வெங்கடேசபுரம், சேந்தமங்கலம், உடன்குடி ஒன்றியத்தில் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி ஒன்றியத்தில் செமபுதூர், கயத்தாறு ஒன்றியத்தில் உசிலங்குளம், தெற்கு மயிலோடை, அய்யனார்ஊத்து, சோழபுரம், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மீனாட்சிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான், கே.தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, பரிவல்லிக்கோட்டை, புதூர் ஒன்றியத்தில் மாசார்பட்டி, மேலகல்லூரணி, முத்தையாபுரம், முத்துசாமிபுரம் அகிய 33 ஊராட்சிகளில் உள்ள மொத்தம் 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.