Amma Restaurant: தூத்துக்குடி மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இரவில் சப்பாத்தி - மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்
மாநகராட்சி பகுதியில் உள்ள புறம்போக்கு மற்றும் பிற வகையான நிலங்களில் குடியிருப்போருக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கும் தண்ணீர் இணைப்பு கொடுக்க முடிவு.
நாட்டின் 77வது சுதந்திர தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், மாநகராட்சியில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றியவர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பசுமையை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநகராட்சி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என மொத்தம் 100 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், “பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிக்கப்படுத்துவதற்காக பிரையன்ட் நகர் வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகம், சிவந்தாகுளம் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் குளிரூட்டப்பட்ட அறை வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். மேலும் சமீபத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, நோயாளிகளுடன் வந்திருப்போர் பகல் நேரங்களில் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு கிடைப்பதால், அதை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இரவு நேரத்தில் அம்மா உணவகம் மூடப்பட்டுவிடுவதால், நாங்கள் இரவு நேர உணவுக்காக மிகுந்த சிரமப்படுகிறோம் என தெரிவித்தனர். அதனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனை வாயில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இரவு சப்பாத்தி வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். மாலையில் சிற்றுண்டி வழங்குவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் 75 கி.மீ. தூரத்திற்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலைகள் உள்ளது .இந்த சாலையில் சேதம் ஏற்பட்டால் அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள சுமார் 250 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்கும் பணிகளானது, 60 வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் உள்ள 21 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரைவில் அனைத்து பகுதி மக்களுக்கும் தினசரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள பழைய பொருள்கள் எதுவாக இருந்தாலும், அதனை மாநகராட்சியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள அறையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டு வந்து கொடுக்கலாம். அந்த பொருள்களை தேவைப்படுவோர் எடுத்துச் செல்லலாம். இதில், பழைய ஆடைகள், கணினி உள்ளிட்ட பொருள்களை கொடுக்கலாம், தேவைப்படுவோர் எடுத்தும் செல்லலாம். இந்த திட்டம் ஏழை, எளியோருக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் மாநகர் பகுதியில் 90 சதவீதம் நெகிழி ஒழிக்கப்பட்டுள்ளன. விவிடி சிக்னல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலையில் நடுவே உள்ள மின் கம்பங்களில் மூவண்ணங்களில் ஒளிரும் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இவை தினமும் ஒளிரும் வகையில் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இது போன்று மாநகரை அழகுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளும் சுகாதாரமான முறையில் இருப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எங்களுடன் இணைந்து தூத்தக்குடியை சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.