பெய்யும் மழையளவை பொறுத்து தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கலாம்.. பொதுமக்கள் இறங்க வேண்டாம் - ஆட்சியர் கார்த்திகேயன்
மேக மூட்டமாக காணப்பட்டதுடன் பல இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் வானம் இருள் சூழ்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல இடங்களில் கன மழையும் பெய்துள்ள நிலையில் நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டதுடன் பல இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் வானம் இருள் சூழ்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, கேடிசிநகர், கிருஷ்ணாபுரம், என்.ஜி்ஓ காலனி, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர்ந்தவாறு சென்றது. மேலும் மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட பகுதியான நாங்குநேரி, வள்ளியூர், களக்காடு, அம்பாசமுத்திரம், பாபநாசம், சேரன்மகாதேவி ஆகிய இடங்களிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலான மழை பெய்தது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பிருப்பதால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல என்ஜிவோ காலனி, பொதிகை நகரில் சாலையின் இருபுறமும் கால்வாய் ஓடையை அடைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நேற்று பெய்த மழையில் சாலைகள் குளமாக மாறியது, இதே போன்று பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை என்ற போதிலும் சில பகுதிகளில் பெய்யும் கன மழையால் சிறு சிறு ஓடைகளின் மூலமாகவும், வரத்து கால்வாய்கள் மூலமாகவும் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து சுமார் 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெய்யக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம் எனவும், நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதோடு இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அறிவிப்பின்படி நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளதை தொடர்ந்து இன்று ( 04.11.23 ) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ( சிறப்பு வகுப்புகள் உட்பட ) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல தென்காசி மாவட்டத்திலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு வகுப்பு உட்பட விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.