![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் பேட்டி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை. அதற்கான அர்த்தம் வேறு. வருமான வரித்துறையினர் சில கணக்குள் தொடர்பாக சரிபார்ப்பு பணிகளை மட்டுமே செய்தனர்.
![வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் பேட்டி The bank has corrected the errors pointed out by the Income Tax Department and submitted it to the Income Tax Department - Interview with CEO S. Krishnan வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/091b21cc2b6d0b2c1abb73013ed927d51690254041195739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2023- 24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டி வருகிறது.
கோப்பு படம்
இந்த வங்கி, தற்போது நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 536 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2023- 24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டி உள்ளது. வைப்புத் தொகை ரூ.47,008 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களின் மொத்தத் தொகை ரூ.37,292 கோடி என்ற நிலையில் உள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு ரூ.7,190 கோடியாக உயர்ந்து உள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.5,427 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ரூ.261.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.234.21 கோடியாக இருந்தது. நிகர லாபம் 11.54 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. கடன்களின் மூலம் வட்டி வருவாய் ரூ.1002 கோடியில் இருந்து ரூ.1156 கோடியாகவும், இதர வருவாய் ரூ.140 கோடியில் இருந்து ரூ.167 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. மொத்த வராக்கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.56 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.93 சதவீதத்தில் இருந்து 0.66 சதவீதமாகவும் குறைந்து உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.381-ல் இருந்து ரூ.454 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி முன்னுரிமை துறைகளுக்கு ரூ.27,805 கோடி கடன் வழங்கி உள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 40 சதவீதம் என்ற இலக்கை தாண்டி 75 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. விவசாய துறைக்கு ரூ.12,231 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடனில் 18 சதவீதம் மட்டுமே வழங்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆனால் 32.80 சதவீதம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.13,311 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023- 24-ம் நிதியாண்டில் மொத்தம் 50 புதிய கிளைகளை திறக்க முடிவு செய்து, முதல் காலாண்டில் 6 புதிய கிளைகளை திறந்து உள்ளோம். மற்ற கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். வங்கி டிஜிட்டல் மயமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை. அதற்கான அர்த்தம் வேறு. வருமான வரித்துறையினர் சில கணக்குள் தொடர்பாக சரிபார்ப்பு பணிகளை மட்டுமே செய்தனர். நிதி பரிவர்த்தனை அறிக்கைக்கும், வங்கி நிதிநிலை அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிதி பரிவர்த்தனை அறிக்கையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய தகவல்கள் இருக்கும். அந்த அறிக்கையில் வாடிக்கையாளர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்தால், அதனை தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து ஒரு சில இடங்களில் தவறு இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளையும் வங்கி சரி செய்து வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளோம். சில தொழில்நுட்ப குறைபாடுகளும் இருந்தது என்றுதான் கூற வேண்டும். அனைத்து குறைகளும் களையப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிதிபரிவர்த்தனை தொடர்பாக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதுவும் அதில் ஒரு வகைதான் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றார்.
பேட்டியின் போது வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் பொதுமேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணை பொதுமேலாளர் அசோக்குமார், தலைமை மேலாளர் ராஜா மற்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)