(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: மனைவி கிளீனிக்கில் மருத்துவம் பார்த்த கணவர் கைது.. தென்காசியில் பரபரப்பு..!
டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் பல நோயாளிகள் இவரது மருத்துவத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜீவா(35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் தென்காசி - ஆலங்குளம் நெடுஞ்சாலை சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பார்மசியில் மனைவி ஜீவா பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அதோடு ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கும் சென்று வந்துள்ளார். ஜீவா பணிக்கு செல்லும் நேரம் கணவர் ஜெயராமன் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் பல நோயாளிகள் இவரது மருத்துவத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதோடு அவர்கள் மற்றொரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்கள் சென்றுள்ளது.
அந்த புகாரின் பேரில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேல் ஆகியோர் நேற்று ஜீவா - ஜெயராமனின் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜெயராமன் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததோடு மருந்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், நேற்று காலையில் போலியாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்த ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்டிஓ லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து நேற்று இரவில் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி அதற்கு சீல் வைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாவூர்சத்திரம் அருகே மனைவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த நிலையில் சாதாரண டிப்ளமோ இன் பார்மசி மட்டும் முடித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.