தென்காசியில் 3 பேரை தாக்கிய கரடி உயிரிழப்பு - இறப்புக்கு காரணம் என்ன..?
"குறிப்பாக அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கரடி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது".
தென்காசி மாவட்டம் கடையம் பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சரகத்திற்குட்பட்டது. இங்குள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் உள்ளது பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு. மலையடிவாரத்தில் உள்ள இக்கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி மசாலா வியாபாரி வைகுண்டமணி மற்றும் சைலப்பன், நாகேந்திரன் ஆகிய 3 பேரை கரடி சரமாரியாக கடித்து குதறியது. அதில் படுகாயமடைந்த மூன்று பேரும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இருவரின் முகம், தாடை, கண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கண்ணும், மற்றொருவருக்கு இரண்டு கண்ணும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைந்தனர். அதன்படி நேற்று சுமார் 5 மணி நேரம் பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெற்றது. இந்த நிலையில் மூவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு சிகிச்சைக்கு பின்னரே பார்வை குறித்த விவரம் தெரிய வரும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதியினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் 2 மயக்க ஊசி செலுத்தி கரடி பிடிக்கப்பட்டது. அதன் பின் பிடிபட்ட கரடியை கூண்டிற்குள் அடைத்து அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் மாஞ்சோலை அருகே, களக்காடு கோட்டத்திற்குட்பட்ட செங்கல்தேரி என்ற அடர் வனப்பகுதியில் கரடியை விட்டனர். அதன்பின்னர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வனத்துறையினர் கரடியை விட்டுச்சென்ற இடத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கரடியை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் துரத்தில் அந்த கரடி இறந்து கிடந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
கரடியின் உடலை மீட்ட நிலையில் 10 வயதுள்ள பெண் கரடி நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அதன் உடலில் இரத்த கசிவு இருந்ததாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் கரடி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்த கரடியின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் களக்காடு வனப்பகுதியிலேயே விறகுகளை அடுக்கி எரிக்கப்பட்டது. பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும். 3 பேரை கடித்து குதறிய கரடியை கூண்டு வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் கரடி தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்