Kanyakumari Local Holiday: குமரியில் வரும் 6ம் தேதி விடுமுறை அறிவிப்பு.. இதுதான் காரணமா....?
தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தக்கலை மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
இங்கு தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா சமாதியானதாக நம்பப்படுகிறது. ஞானமாமேதை என புகழப்படும் தக்கலை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இவரது ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான விழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை தினமும் இரவு மவுலீது ஓதுதல், மார்க்க பேருரையாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கவுள்ளது.
இந்நிகழ்வில் மதுரை தலைமை இமாம் முகமது ரபீக் மிஸ்பாகி, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, செயலாளர் அப்துல் ரஹ்மான் பாகவி, காயல்பட்டினம் செய்யது அப்துல் ரஹ்மான், தக்கலை தலைமை இமாம் முகம்மது சலீம், மேலப்பாளையம் ஹைதர் அலி உஸ்மானி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு தொடங்கி 6 ஆம் தேதி காலை வரை பீர் முகம்மது சாகிபு ஒலியுல்லாவின் சமாதி அருகே அவர் பாடிய இறைவனை போற்றி பாடிய ஞானப்புகழ்ச்சி பாடலை ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து பாடும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து அன்று மாலை 4.40 மணிக்கு பொது நேர்ச்சை, 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மூன்றாம் சியாரத் நேர்ச்சை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இதனிடையே தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.