(Source: ECI/ABP News/ABP Majha)
TMB: 4 ஆயிரத்து 410 கோடி ரூபாயை கணக்கில் காட்டாத தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி - வருமான வரித்துறை அதிர்ச்சி தகவல்
டி.எம்.பி. வங்கி ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2700 கோடி ரூபாய் தொகையும்பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி:
அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அவர்களை கண்காணிக்கும் பணி என்பது வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், கண்காணிப்பதோடு மட்டுமின்றி முறையாக கணக்குகாட்டவில்லை எனில் அவற்றை சோதனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிரடி சோதனையை வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (கடந்த 27 ஆம் தேதி) தூத்துக்குடியில் தலைமை இடத்தில் சோதனை நடத்தினர்.
சோதனை:
தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது. 5 வாகனங்களில் வந்த 16 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 27 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் துவங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக கணக்கு காட்டாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்கு தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாடுடன் கணக்கு காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை பொறுத்தவரை 1921ம் ஆண்டு துவங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் வருமான வரித்துறை சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சோதனை சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற நிலையில், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து 6 பைகளில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட விளக்கக் கடிதத்தில், ``தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது.
4 ஆயிரத்து 410 கோடி:
இந்நிலையில், தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.4,410 கோடி அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.கடந்த ஐந்து வருடங்களில் கணக்குகளை ஆய்வு செய்த போது நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது. ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2700 கோடி ரூபாய் தொகையும், கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் 110 கோடி ரூபாயும், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடியும் மற்றும் பங்குகளில் 600 கோடியும், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.