பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் உயிர் பயம் காட்டி மிரட்டல் - சூர்யாவின் தாத்தா பேட்டி
கல்லிடைக்குறிச்சி போலீசார் வீட்டில் உள்ள சூர்யாவின் மனைவி தாய் மற்றும் பூதப்பாண்டியன் மனைவி ஆகியோரை அழைத்து தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறினால் உங்களை வாழ விடமாட்டோம் என உயிர் பயம் காட்டி மிரட்டியதாகவும் கூறினார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியதாக வந்த புகாரை அடுத்து உயர் மட்ட விசாரணைக் குழுவை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அமுதா தலைமையில் முதற்கட்ட விசாரணை ஏற்கனவே நடைபெற்ற நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாத நிலையில் நேற்று இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியது. முன்னதாக இந்த புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணையின் போது முதல் முதலாக சாட்சி அளிக்க வந்த சூர்யா தான் கீழே விழுந்து பற்கள் உடைந்ததாக கூறி சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா வட்டாட்சியர் அலுவலகம் வந்து ஐஏஎஸ் அமுதா முன்னிலையில் தனது சாட்சியத்தை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அப்போது எனது பேரனின் இரண்டு பற்களையும் பிடுங்கி அவர் உயிர் தளத்திலும் மிதித்து பிழைக்க விடாமல் செய்து விட்டார்கள். கேட்க ஆள் இல்லாததால் இது போன்று செய்து உள்ளனர். மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என்று காவல்துறையினரால் வீட்டில் உள்ள பெண்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறினார். இது தொடர்பாக விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளேன். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கல்லிடைக்குறிச்சி போலீசார் வீட்டில் உள்ள சூர்யாவின் மனைவி தாய் மற்றும் பூதப்பாண்டியன் மனைவி ஆகியோரை அழைத்து தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறினால் உங்களை வாழ விடமாட்டோம் என உயிர் பயம் காட்டி மிரட்டியதாகவும் கூறினார்.
சூர்யா குடிபோதையில் சிசிடிவி கேமராக்களை உடைத்தது உண்மைதான். அதற்கு 45,000 ரூபாய் பிணையத்தொகை பெற்றதை திருப்பிக் கொடுத்ததாகவும் கூறி இந்த பணத்தைக் கொண்டு வெளியூர் சென்று மருத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். சார் ஆட்சியர் அலுவலகம் வந்து தனது பேரன் சாட்சி சொன்னதிலிருந்து இதுவரை தனது பேரனை பார்க்கவில்லை என்றும் அவன் எங்கே இருக்கிறான் என்றும் தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..