கொத்து கொத்தாய் மனித எலும்பு கூடுகள் - கண்டறியப்பட்ட விடுதலை புலிகளின் ஆடைகள்: முல்லைத்தீவு அருகே அதிர்ச்சி
கொத்து கொத்தாய் மனித எலும்பு கூடுகள்- சரணடைந்த விடுதலைபுலிகள் பயன்படுத்திய ஆடைகளும் கண்டறியப்பட்டு உள்ளதால் அதிர்ச்சி.
இலங்கை முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் அடுத்த வாரம் அகழாய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதுவரை எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்ச ஆட்சியின்போது ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2013 மார்ச் 20-ம் தேதி வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீச்சரம் செல்லும் வழியில் குடிநீர்த் திட்ட குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. அப்போது தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அதேபோல, அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக் காலத்தில் 2018 மார்ச் 26-ல் மன்னாரில் உள்ள சதோச விற்பனைக் கூடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு செய்ததில் மொத்தம் 342 எலும்புக்கூடுகள் கிடைத்தன. எனினும், இந்த எலும்புக் கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையில், அவரை 15 முதல் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக ஜேசிபி கொண்டு நிலத்தினை தோண்டியபோது, நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் வரும் 6ம் தேதி அகழாய்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அது பெண் போராளிகளின் தடயங்களாக காணப்படுகின்றது. பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரிய ஐயம் எழுந்துள்ள நிலையில் அந்த பகுதிக்கு நீதிபதி வருகை தந்தபோது, அங்கு வந்த மனித உரிமைகள் வழக்கறிஞர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயப்பாட்டாளர், கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் நீதிபதியிடம் மனித எச்சங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என ஏற்கெனவே மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.