அண்ணாமலைக்கு நன்றி சொன்ன சபாநாயகர் அப்பாவு - எதற்கு தெரியுமா..?
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்க உத்தரவிட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, நீங்களே சமூக வலைதளங்களில் போட்டுக்கொண்டு நீங்களே கேள்வி கேட்டால் எப்படி சபாநாயகர் பதில்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 950 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிடம் மற்றும் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் 110 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், கலையரங்கம் மற்றும் நுழைவு வாயில் போன்றவற்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்,
இதனை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் கலைஞர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் 33 மாத காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறார் என்பதை தெரியப்படுத்தும் வண்ணம் எல் இ டி திரை மூலம் திரையிடப்பட்டு உள்ளது. 9.5 கோடி மதிப்பீட்டில் இன்று நெல்லை மாவட்ட ஊராட்சிகளின் திட்ட இயக்குனர் அலுவலகம் உள்ளிட்டவற்றை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்க நீங்கள் உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது அது உண்மையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீங்களே சமூக வலைதளங்களில் போட்டுக்கொண்டு நீங்களே கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும் என்றார். அதேபோல சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு? ஆளுநர் நடுநிலையாக செயல்படாமல் நடந்து கொண்டது தவறு என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அண்ணாமலைக்கு நன்றி என பதில் அளித்தவாறு சிரித்துகொண்டே சென்றார்.