(Source: ECI/ABP News/ABP Majha)
வெள்ளநீரை மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் வழியாக குளங்களுக்கும் வழங்க ஏற்பாடு - சபாநாயகர்
இத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களும் ஆக மொத்தமாக 50 கிராமங்கள் பயன்பெறும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் வரும் வெள்ளநீரை பயன்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மறைந்த தலைவர் கலைஞரின் கனவு திட்டமாக தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு நதிநீர் திட்டம் கன்னடியன் கால்வாயிலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் வெள்ளங்குழி என்ற இடத்தில் இருந்து 75 கி.மீ தூரம் வரை எம் எல் தேரியில் சென்று சேரும் திட்டம். அதிகபட்ச திட்டப்பணிகள் முடிவடைந்தது. நெல்லை மாவட்டத்தை தாண்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கி.மீ தூரத்தில் கால்வாய் வெட்ட வேண்டிய பணி உள்ளது. இதில் 8 ஏக்கர் பரப்பளவிற்கு நீதிமன்ற தடை இருந்தது. தற்போது ஆட்சியர் தலையிட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நிலம் ஆர்ஜிதம் செய்ய இன்னும் 6 மாத காலம் தேவைப்படும். அதன் பின்னர் தான் பணி செய்ய முடியும். அதற்கு முன்னால் இருக்ககூடிய ஆறுகளுக்கும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அதிசய கிணறு மாதிரி தான் அந்த பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் தண்ணீர் விட விட நிலப்பகுதிக்குள் இழுத்துக்கொண்டே இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பணிகள் முடிவுற்று இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் சுமார் 3200 கன அடிநீர் தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் வழியாக குளங்களுக்கும் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மழை வெள்ளக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம் சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சியான பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் முதல்வர் கலைஞர் தாமிரபரணி- நம்பியாறு -கருமேனியாறு ஆகிய நதிகளை இணைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்டமாக 214 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடங்கினார். பல்வேறு அரசியல் காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் சுமார் 969 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு உயர்ந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்பு முழு வீச்சில் நடைபெற தொடங்கியது.
இத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களும் ஆக மொத்தமாக 50 கிராமங்கள் பயன்பெறும். மாவட்டங்களில் 252 குளங்கள் 5220 கிணறுகள் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 17002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உட்பட 23040 ஹெக்டேர் (56933 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்காக சாத்தான்குளம் பகுதியில் எம்.எல். தேரி என்ற பகுதியில் பெரிய குளமும் நீரை சேர்த்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் கால்வாய்க்காக ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் முடிவுற்று அங்கு ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.