"எதிர்க்கட்சியாக இருக்கும் போது இந்தி தெரியாது போடா, ஆளுங்கட்சியானவுடன் இந்தி தெரியும் வாடா” இது தான் திமுகவின் கொள்கை - சீமான்
தமிழகத்தில் உள்ள எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியல் ஆரம்ப புள்ளியே அதுதான்.
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று பாளையங்கோட்டை எல்எஸ் மஹாலில் வைத்து வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு பா.சத்யா, மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு மயிலராஜன், கன்னியாகுமரி தொகுதிக்கு மரிய ஜெனிபர் ஆகியோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ”கன்னியாகுமரியில் பாராளுமன்ற தொகுதியில் மரிய ஜெனிபர், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு சத்யாவும் போட்டியிடுகிறார்கள். 20% எங்கள் கட்சியில் பெண்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளோம். எந்த முறையும் யாருடனும் கூட்டணி என்பது கிடையாது. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். இந்தியாவின் பிரதமரான மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியுமா? நான் காங்கிரஸையும் பிஜேபியும் சம எதிரியாக தான் பார்க்கிறேன். இரண்டு பேரோடு நின்று நான் சண்டையிடுவேன். தேசியமே இல்லை என்பது எனது கோட்பாடு. ஆகவே தேசிய கட்சியை நான் கண்டிப்பாக எதிர்ப்பேன். பிஜேபியும், காங்கிரஸியும் தமிழகத்தின் உள்ளே அனுமதிக்க முடியாது.
காவிரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதை பற்றியும் பிஜேபிக்கு கவலை இல்லை. என் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதை கொள்ளை அடிப்பது திராவிடம் தடுக்காமல் இருக்கிறது. பிஜேபி தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை சொல்லட்டும். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என தெரிவிப்பது மட்டும் தான் பிஜேபி. இந்த இரண்டு பணத்தையும் செல்லாது என அறிவித்த பிஜேபிக்கு நாங்கள் செல்லா காசா? இந்திய பொருளாதாரமும் சீரழிந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. மோடி மீண்டும் பாரத பிரதமராக வந்து விடுவார் என்று எதிர்க்கட்சியில் இந்தி தெரியாது போடா என்றனர். ஆளுங்கட்சி ஆனவுடன் இந்தி தெரியும் வாடா என தெரிவிப்பது தான் திமுகவின் கொள்கை. தற்போது கேலோ விளையாட்டு போட்டிக்கு கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது” என்றார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக கேள்விக்கு, ”ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன் மட்டும் தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என அவர் நினைப்பார். நல்ல ஆட்சி நல்ல அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியல் ஆரம்ப புள்ளியே அதுதான். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் கையெழுத்தை மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்கள். இந்த கையெழுத்தை ஜனாதிபதி, பாரத பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் வழங்கப்படவில்லை, விளையாட்டு துறைக்கு நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது கூட அவரிடம் வழங்கி இருக்கலாம். அப்போது எல்லாம் வழங்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று ஏன் பாரத பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கவில்லை. பொழுதுபோக்குக்காக திமுக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். மாநாட்டில் காண்பிப்பது மட்டும்தான் அவர்கள் வேலையாகும். நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் அது ஏமாற்று வேலையாகும். இது தமிழ் தேசியம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். இந்த மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்படவில்லை, சட்டமன்ற தேர்தல் மட்டும் தான் நான் போட்டியிடுவேன்” என கூறினார்