அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்; கட்சிக்கு கெட்டப்பெயர் - புலம்பும் திமுக கவுன்சிலர்
மாநகராட்சி பூங்காவை மாநகராட்சியே பராமரிக்க வேண்டும்-சி.பி.எம் கோரிக்கை-பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் இயற்றம்
தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மான்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் தி.சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். மாநகராட்சி சொத்துவரி ஆவணங்களில் டூவிபுரம் மேற்கு பகுதி என இருப்பது அண்ணாநகர் என பெயர் மாற்றம் செய்யப்படும் என மேயமர் தெரிவித்தார். இந்த தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டப்பொருளில் உள்ள 9 தீர்மானங்களும் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன. இதில், கடந்த நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டங்களின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் முதல்கட்டமாக 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.21.02 கோடி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி என மொத்தம் ரூ.41.02 கோடியில் 60 வார்டுகளிலும் சாலைகள், மழைநீர் வடிகால், குடிநீர் பணிகள், சிறுபாலம், தெருவிளக்கு போன்ற பணிகளை செய்ய அனுமதி கோரும் தீர்மானம் முக்கியமானதாகும்.
மேலும், தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி அருகே அமைந்துள்ள போக்குவரத்து பூங்கா பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆர்.முத்துமாரி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பூங்காவை மாநகராட்சியே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இருப்பினும் போக்குவரத்து பூங்கா பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் நிறைவேறியது.
தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினர். அவைகளுக்கு மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் பதிலளித்தனர். சில மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த மேயர், தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 4500 சாலைகள் உள்ளன. இதில் அவசிய தேவைகளை கருத்தில் கொண்டும், விதிமுறைகளை பின்பற்றியும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமான சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் உள்ளன. அவைகளையும் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும் என்றார்.
45-வது வார்டு திமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசும்போது, அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். இந்த கடைகளை கட்டும் போதே தடுக்காமல், கடைகளை கட்டி தொழில் செய்யும் போது சீல் வைப்பதால் தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் நமக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் தான். அவர்களிடம் நாம் எப்படி ஓட்டு கேட்க முடியம். இதன் மூலம் நமது கட்சிக்கான ஓட்டுகள் பாதிக்கப்படும் என்றார்.
இதேபோல் 31-வது வார்டு திமுக உறுப்பினர் எஸ்.பி.கனகராஜ் பேசும்போது, தனது வார்டு பகுதியில் ஒருவர் தனது வீட்டோடு கட்டிய கடைக்கு தீர்வை போடுவதற்காக மாநகராட்சியிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த கடையையே இடிப்போம் என மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, நான்கு கடை உரிமையாளர்கள் முக்கியமா அல்லது 6 லட்சம் மக்கள் முக்கியமா என்பதை பார்க்க வேண்டும். விதிமுறை மீறல் என்று பார்த்தால் 90 சதவீத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மக்களுக்கு இடையூறாக, பாதிப்பாக உள்ளிவற்றை மட்டுமே சீல் வைக்கிறோம். அதுவும் முறையாக நோட்டீஸ் கொடுத்து தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து ஆணையர் சாருஸ்ரீ பேசும்போது, ஏற்கனவே உள்ள பழைய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. புதிதாக கட்டப்படும் கடைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம். 4 பேர் நலன் முக்கியமா அல்லது 4 முதல் 5 லட்சம் மக்கள் நலன் முக்கியமா என்பதை சிந்திக்க வேண்டும். யாருடையை தொழிலையும் கெடுக்க வேண்டும், கெடுதல் செய்ய வேண்டும் என்பது மாநகராட்சி நோக்கம் அல்ல. முறையாக திட்ட அனுமதி பெற வேண்டும் என கூறுகிறோம். சில கடைகள் மீது நடவடிக்கை எடுத்தால், அதை பார்த்து மற்றவர்கள் தவறு செய்யமாட்டார்கள். விதிகளை முறையாக பின்பற்ற நினைக்கிறோம். அதற்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.