Nellai Rains: 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த 72 வயது முதியவர்! போராடி மீட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்!
நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித்தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராடி மீட்டனர்.
39 மணி நேரம் மரத்தில் சிக்கித்தவித்த முதியவர்:
நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தில் தோட்டத்தை வாழ்விடமாக்கி 20 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருபவர் செல்லையா. வயது 72. இவர் கடந்த 17ம் தேதி அன்று இரவு திடீரென இரவு நேரத்தில் வெள்ள நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு அவர் இருந்த தோட்டத்தினை சூழ்ந்தது. மேலும் தான் வளர்த்த ஆடுகள் கண்முன்னே வெள்ளத்தில் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சியில் மரத்தின் மீது ஏறி அமர்ந்து தூக்கமின்றியும், உணவின்றியும் இரவும் பகலுமாக 39 மணிநேரம் தவித்து வந்துள்ளார்.
மீட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி:
அவர் அங்கு இருப்பதாக அவரது நிலை தெரியாத அவரது மகன் கொடுத்த தகவலின்படி பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி பெற்ற SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் 15 பேர் 1 மணி நேர முயற்சிக்கு பின் 1 கிலோமீட்டர் பரப்பளவின் நீரில் நீந்திச்சென்று முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். துணிச்சலுடன் செயலாற்றியதை பார்த்த கிராம மக்கள் அனைவரும் எஸ்டிபிஐ கட்சியினரை பாராட்டினர்.
அதே போல நெல்லை சந்திப்பு பகுதியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்த வண்ணம் இருந்ததை கருத்தில் கொண்டு வெள்ளநீரில் சிக்கியுள்ள மக்களை மீட்க துடுப்புபரிசல் ஏற்ப்பாடு செய்து சிந்துபூந்துறை மற்றும் கைலாசபுரம், குடியிருப்புகள் மற்றும் இரயில் நிலையத்தில் தவித்த பயணிகள் என 150க்கும் மேற்பட்ட நபர்களை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரையிலும் பரிசல் மூலமாக பத்திரமாக மீட்டனர். துணிச்சலுடன் திறம்பட செயலாற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் நடுவகுறிச்சி, கான்ஷாபுரம் போன்ற வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் உணவின்றி தவித்த சுமார் 1000க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். அவர்களுக்கு தேவையான இரவு உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். அதே போல சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாடிகளில் உணவின்றி தவித்த சுமார் 1000க்கும் மேற்பட்டோர் படகு மூலம் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.