சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அகற்றவேண்டும் - தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை
சலவை கூடத்தில் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற வேண்டும். சலவை கூடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை சலவைத் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்
தூத்துக்குடி சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்றக் கோரி சலவைத் தொழிலாளர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் அமைத்தர், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பூங்கா சீரமைப்பு, அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சலவைத் துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன சலவைக் கூடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சலவைக் கூட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சலவை கூடத்தில் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற வேண்டும். சலவை கூடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை சலவைத் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சலவைத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
இந்நிலையில் சலவைக் கூடத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை பொங்கல் பண்டிகை முன்னிட்டு திறக்க மாநகராட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பூங்காவை சுத்தம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சென்றனர். அப்போது அங்கு திரண்ட சலவைத் தொழிலாளர்கள் சிலர் மாநகராட்சி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாநகராட்சி அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக 25 சலவைத் தொழிலாளர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு மாநகராட்சி பணியாளர்கள் பூங்காவை சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து செய்தனர்.
இந்நிலையில் சலவைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பூங்காவை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சலவைத் தொழிலாளர்கள் சலவைக் கூடம் முன்பு அமர்ந்து மறியல் போாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயை சந்தித்து இது தொடர்பாக மனு அளி்ததனர். அதில் சலவைத் தொழிலாளர்கள் துணி உலர போடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவால் அவர்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படும். எனவே, அந்த பூங்காவை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,சலவைக் கூடத்துக்கு நேரில் சென்று அங்கு போராட்டம் நடத்திய சலவைத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சலவைக் கூடம் முழுவதும் உங்களது பயன்பாட்டுக்கானது தான். உங்கள் வசதிக்காக தான் நவீன சலவைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தொழிலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து சலவைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.