குவியும் 3 ஆயிரம் போலீசார்! குமரியில் மோடியின் ப்ளானும் கப்பல் போக்குவரத்தின் ஏற்பாடுகளும்!
" பிரதமர் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் 3000 போலீசார் இன்று மாலை முதல் குவிக்கப்பட உள்ளனர்"

18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. ஆறு கட்டம் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஏழாவது கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் தியானம் செய்வதற்காக வருகை தருகிறார். 30 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார். அதனை தொடர்ந்து 31-ஆம் தேதி முழுக்க முழுக்க தியானத்தில் தனிமையில் இருக்க உள்ளார். வரும் ஒன்றாம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார். ஒன்றாம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரைந்து வந்து சேர்ந்து ஒன்றாம் தேதி பிற்பகல் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கன்னியகுமரியில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடைய நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் 3000 போலீசார் இன்று மாலை முதல் குவிக்கப்பட உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் 30 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபடவுள்ளார். இதே போல கடந்த மக்களவை தேர்தலின் போதும் பிரச்சாரம் நிறைவு பெற்ற பின்னர் உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரம் கொண்ட கேதார்நாத் கோவிலுக்கு சென்று 17 மணி நேரம் அங்குள்ள பனிக்குகையில் தியானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, பகவதி அம்மனை தரிசிக்கிறார், மேலும் திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

