Thirunelveli : நெல்லையில் இரவு நேரங்களில் சாலைகளில் கரடி நடமாட்டமா..? பீதியில் மக்கள்..!
”கரடியால் பொதுமக்களிடையே மேலும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்”
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இங்குள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள்ளே புகுந்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வரும் சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக, கடந்த மாதம் அம்பாசமுத்திரம் அருகே கோட்டவிளைப்பட்டியில் பெண் ஒருவரை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலைக்கு சென்ற கலையரசி என்ற பெண்ணை குட்டிகளுடன் சுற்றி திரிந்த கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
குறிப்பாக பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான டாணா, கோட்டைவிளை பட்டி, அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவரும் நிலையில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே நடமாடும் சூழல் இருப்பதாக கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாபநாசம் டாணா பகுதியில் ஒற்றை கரடி இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. அதனை அப்பகுதியிலுள்ள நாய்கள் குறைத்து விரட்டியுள்ளன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வந்து பார்த்த அப்பகுதி மக்கள் கரடி செல்வதை பார்த்து உள்ளனர்.
அப்போது அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே மேலும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடியால் பாபநாசம், டாணா சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்