Vinayaga Chathurthi 2022 : நெல்லையில் மீண்டும் ஒளியுடன் விநாயகர் சதுர்த்தி.. சிலை தயாரிப்பு பணிகளில் வடமாநிலத்தவர்கள் மும்முரம்..
”கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தாக்கத்தால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வட்டிக்கு கடன் வாங்கி தான் தொழில் செய்து வருகிறோம்”
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக பல வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கி பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று தாக்கத்தால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு மற்றும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இயற்கையை மாசுபடுத்தாத வகையில் இச்சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று தாக்கம் ஊரடங்கு உத்தரவு என இரண்டு ஆண்டுகளாக விற்பனை இல்லாத நிலையில் நெல்லை மாவட்டம் சிவலப்பேரி சாலை பகுதியில் முகாமிட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் ஒரு அடி முதல் 10 அடி வரையிலான சிறிய சிலைகள் தயாரிக்கும் பணியில் தற்போது மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாமரை விநாயகர், விஷ்ணு விநாயகர், ராஜ கணபதி என 25க்கும் மேற்பட்ட மாடல்களில் விநாயகர் சிலை தயாராகும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட சிலைகள் செய்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலம் என கேரளாவிற்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக தொழிலில் தேக்கம் மற்றும் தற்போது விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் குறைந்த அளவே உள்ளதால் இந்த ஆண்டு 150 சிலைகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகளில் விற்பனை பழைய நிலைக்கு திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சிலை தயாரிக்கும் தொழிலாளி கூறுகையில், நாங்கள் 20 ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். ஒரு அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் செய்து வருகிறோம். 100 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சிலைகளின் அளவு, வேலைப்பாடு என பல்வேறு காரணங்கள் மூலமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தாக்கத்தால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சிலைகள் தயாரித்து வருகிறோம். இந்தாண்டு வட்டிக்கு கடன் வாங்கி தான் தொழில் செய்து வருகிறோம். இரண்டு ஆண்டுகள் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் சுமாராக தான் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை இல்லாத நிலையில் இந்த ஆண்டும் சிலைக்கான ஆர்டர்கள் குறைவாக தான் உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கும் வேலையில் விற்பனை பழைய நிலைக்கு திரும்பும் என நம்பிக்கையுடன் சிலை தயாரிக்கும் பணியை செய்து வருகிறோம் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்