நெல்லையில் சோகம் - விடுமுறை முடிந்து பள்ளி செல்லவிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது வீட்டில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம் வசந்தாபுரம் பகுதியை சேர்ந்த நபர், கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டில் தானே கேக் தயாரித்து அனைவருக்கும் உண்பதற்கு கொடுத்து புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். அதே வேளையில் இரவு தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு இரவில் மாணவி தூங்க சென்றுள்ளார். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது, இன்று காலை மாணவி பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில், திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதுடன் மகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மகளை மீட்ட அவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவியை அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போரை கலங்கச் செய்தது, மேலும் மாணவியின் தற்கொலை குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது வீட்டில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060