Nellai: மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
வார விடுமுறை தினங்கள் வருவதையொட்டி வனத்துறையின் அனுமதியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அருவியில் குளிக்க அனுமதி:
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 17 -ந் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. குறிப்பாக மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 18-ந் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். ஆனால் அருவியை தொலைவில் இருந்து பார்வையிட மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் இன்று முதல் மீண்டும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் தங்கள் குடும்பங்களுடன் வந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளித்து வருகின்றனர். வார விடுமுறை தினங்கள் வருவதையொட்டி வனத்துறையின் அனுமதியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மணிமுத்தாறு நிலவரம்:
நெல்லை மாவட்டத்தில் பெரிய அணைகளில் ஒன்று மணிமுத்தாறு அணை. 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் தற்போதைய நிலவரப்படி, 55.30 அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு அணைக்கு வினாடிக்கு 116 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீர் வெளியேற்றம் 5 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மழை அளவை பொறுத்தமட்டில் மணிமுத்தாறு அணையில் 5.6 மி.மீட்டராக உள்ளது. இந்த அணையின் மூலம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்:
பாபநாசம் அணை :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 86.35
அடி
நீர் வரத்து : 468.576 கன அடி
வெளியேற்றம் : 954.75
கன அடி
சேர்வலாறு அணை :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 91.33 அடி
நீர்வரத்து இல்லை
வடக்கு பச்சையாறு அணை:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 6.75
அடி
நீர் வரத்து இல்லை
வெளியேற்றம் இல்லை
நம்பியாறு அணை :
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து இல்லை
வெளியேற்றம் என்பது இல்லை
கொடு முடியாறு அணை :
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 46.25 அடி
நீர்வரத்து: 20 கன அடி
வெளியேற்றம் என்பது இல்லை