கூண்டுக்குள் தானம் புத்தக பெட்டியில் கிடைத்த புத்தகங்கள்..! சென்னைக்கு அடுத்த படி நெல்லை..! காவல் அதிகாரி தகவல்..!
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆறாவது நெல்லை பொருநை புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி துவங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் தொடர்ந்து 11 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இலக்கியம், காவியங்கள், வரலாறு, இதிகாசங்கள், சிறுகதைகள் என மாணவ மாணவிகளுக்கு தேவையான லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக வெறும் புத்தக அரங்குகள் மட்டுமல்லாமல் நாள்தோறு பல்வேறு கைவினை பயிற்சி பட்டறைகள், தொடர் வாசிப்பு போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.
எனவே நெல்லை மாவட்டம் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தினமும் புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்றனர். இந்த 6-வது நெல்லை பொருநை புத்தகத் திருவிழா ”அனைவருக்குமான பன்முகத் தன்மை” என்ற கருப் பொருளில் அமைக்கப்பட்டது. முதல் மூன்று நாட்கள் மாற்றுத் திறனாளிகளிக்காக 32 சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. புத்தகத் திருவிழாவில் சிறப்பு அரங்கமாக சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கும் வகையில் கூண்டுக்குள் வானம் என்ற சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கினர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரி தெரிவிக்கையில், புத்தகத் திருவிழாவில் இதுவரை சுமார் 6000க்கும் அதிகமான புத்தகங்கள் சிறை கைதிகளுக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மூன்று லட்ச ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் சிறை வாசிகளுக்காக 35 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் நெல்லையில் 6000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் புத்தக திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கினார். ஆட்சியராக வந்தால் புத்தகங்களுக்கு பணம் வாங்க தயங்குவார்கள் என்பதால் ஆட்சியர் கார்த்திகேயன் தன்னுடன் உதவியாளர்கள் யாரையும் அழைக்காமல் தனி ஆளாக வந்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் புத்தக திருவிழாவில் சிறப்பாக பங்களிப்பு செய்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், பணியாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இறுதியாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசும்போது புத்தகத் திருவிழாவை காண ஆறு லட்சம் வருகை தந்துள்ளதாகவும் அதில் 50% பேர் இளைஞர்கள் என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்