தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை.. காட்டுக்குள் களப்பயணம் மேற்கொண்ட நெல்லை மாணவர்கள்..
காட்டில் வாழும் சிறு பூச்சிகள் தொடங்கி பறவைகள் விலங்கினங்கள் என ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து அறியும் "காடு வழி நடைப்பயணம்" எனும் திட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட களப்பயணத்தை ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
இயற்கையோடு இணைந்து நடக்க கற்றுக் கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி வசப்படும், அதனை சிறு வயதிலேயே மாணவர்கள் மத்தியில் இயற்கையை குறித்து புரிய வைப்பது என்பது அவசியமான ஒன்றாகும், இதைக் கருத்தில் கொண்டு நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் நாடு அரசு வனத்துறை மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் இணைந்து தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை என்ற களப்பயண நிகழ்ச்சியை இன்று தொடங்கியுள்ளனர். இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களை முண்டந்துறை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர்.
அதிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை அழைத்து சென்று காடுகள், தாமிரபரணி நதிக்கரைகள், குளங்கள், தேரிக்காடுகள் என இயற்கை வளம் மிகுந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அழைத்துச் சென்று அதுக் குறித்த செய்திகளை கற்றுக் கொடுத்தனர். "தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை திட்டத்தில்" முதல் நிகழ்வானது இந்தியாவின் பறவை மனிதன் முனைவர் சாலிம் அலி அவர்களின் 125-வது பிறந்த நாளான இன்று முண்டந்துறை வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 21 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் இயற்கை நடையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மைய ஆய்வாளர்கள் மரிய ஆண்டனி, தளவாய் பாண்டி, ராம நாராயணன் ஆகியோர் மாணவர்களுக்கு இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்தும், உயிரினங்களை பாதுகாப்பது, காடுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் விளக்கினர். தொடர்ந்து மாணவர்கள் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு உற்று நோக்குதல் குறித்து முதலில் கற்று கொடுத்தனர். விலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், காட்டுக்குள் உள்ள சிற்றோடைகள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டு அது சார்ந்த விஷயங்களும் கற்று கொடுக்கப்பட்டது,
வன ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் தானியங்கி கேமரா, ஜி.பி.எஸ்., காற்றின் வேகத்தை கண்டறியும் கருவி, தூரத்தைக் கணக்கிடும் கருவி என உபகரணங்கள் காட்சிப் படுத்தப்பட்டு அவைகள் செயல்படும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது,
பறவைகள், ஆயிரம்கால் பூச்சிகளின் வகைகள், கரடியின் எச்சங்கள், வண்ணத்து பூச்சிகளின் வகைகள், என பல்வேறு விதமான உயிரினங்களை பார்வையிட்டு அறிந்ததுடன் அவற்றை பாதுகாப்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது, பறவையை கருவி மூலம் பார்த்த மாணவி அதனை அப்படியே வரைந்து காண்பித்து அசத்தினார். இது குறித்து மாணவர்கள் கூறும் பொழுது, இது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இது போன்ற களப்பயணம் மூலம் கற்றல் திறனை மேம்படுத்த முடியும், வெறும் புத்தக அறிவோடு மட்டுமின்றி அனுபவ ரீதியாக பல்வேறு விசயங்களை கற்று கொள்ள முடிகிறது என சைகை பாஷையில் தெரிவித்தனர்.
ஆய்வாளர் மரிய ஆண்டனி கூறும் பொழுது, அரிய வகை உயிரினங்களை இன்று பார்த்து, அதனை மாணவர்களுக்கு விளக்கி கூறினோம், அவர்களும் ஆர்வமுடன் கற்று கொண்டனர், அதே போல காடுகளின் முக்கியத்துவம் என்ன? அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும், ஆறுகளின் முக்கியத்துவம் என்ன? ஏன் தாமிரபரணி வற்றாத நதியாக ஓடுகிறது என கற்றுக் கொண்டனர். புத்தக அறிவை தாண்டி நேரடியாக படிக்ககூடிய அரிய வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்து உள்ளது, இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்து உள்ளது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக களப்பயணத்திற்குப் பிறகு மாணவர்கள் சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
தாவரமோ உயிரினமோ காட்டில் காணும் எதனையும் உற்றுநோக்கும்போது அதிலிருந்து ஆராய்ச்சி குறித்த அறிவு கிடைக்கப்பெறுவது காடுகள் வழி நடைப்பயணத்தில் சாத்தியமாகும் என்பதே உண்மை