(Source: ECI/ABP News/ABP Majha)
அறிவிப்பு ரூ.6 ஆயிரம், கொடுப்பது ஆயிரம் நம்பி ஏமாற்ற வைத்திருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்
வெள்ளம் வந்து சென்ற 10 நாட்களில் உடனடியாக எதையும் செய்துவிட முடியாது. வெள்ள நிவாரணம் கொடுப்பது, சாலைகளை சரிசெய்வது என்பது போன்ற வேலைகள் உள்ளது.
நெல்லையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு முறையான நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மானூர் தாலுகாவில் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும் அதனை வாங்க மறுத்து ரூ.6000 வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சேர்ந்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை, மானூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அது தவறான கருத்தாக, செயலாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள 43 பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என சொன்னதற்கிணங்க ஆட்சியரை சந்திக்க வந்தேன், அரசாங்கத்திடம் இருந்து அப்படிதான் உத்தரவு வந்துள்ளது என கூறினார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புபடி மானூர் தாலுகாவில் பல கிராமங்களுக்கு 6 ஆயிரம் என அறிவித்துள்ளார், அதற்கான அறிவிப்பு என்னிடம் உள்ளது, ஆனால் அவர்களுக்கு 6 ஆயிரம் கொடுக்காமல் வெறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது அவர்களை நம்பி ஏமாற்ற வைத்திருக்கும் ஒரு செயலாகும். எனவே ஆட்சியர் இதனை அரசாங்கத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்து மானூர் தாலுகாவில் உள்ள அனைத்து இடங்களிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 29 ரேசன் கடைகளுக்கு 6 ஆயிரம் அறிவித்து இப்போது அதுவும் இல்லை ஆயிரம் என கொடுக்கின்றனர் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் சரியாக கையாளவில்லையா? அல்லது அதிகாரிகள் சரியாக கையாளவில்லையா என்பதை தாண்டி அறிவிப்பு உள்ளது. அதன்படி பணம் கொடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கண்டிப்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வேன், ஏற்கனவே அவரை பார்க்கும் பொழுது சொன்னேன், ஆனால் எழுத்து மூலமாக எதுவும் கொடுக்கவில்லை, நேரடியாக வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வந்துள்ள நிலையில் அது குறித்த கேள்விக்கு, வெள்ளம் வந்து சென்ற 10 நாட்களில் உடனடியாக எதையும் செய்துவிட முடியாது. வெள்ள நிவாரணம் கொடுப்பது, சாலைகளை சரிசெய்வது என்பது போன்ற வேலைகள் உள்ளது. அதன்பிறகு காலம் தாழ்த்தாமல் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இது குறித்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அழுத்தம் தெரிவித்து நான் பேச இருக்கிறேன் என்றார்.