(Source: ECI/ABP News/ABP Majha)
முதல்வர் இந்த துறையில் இருந்ததால் மக்களுக்கு எது தேவை எது தர வேண்டும் என அறிந்து நிதி ஒதுக்குகிறார் - அமைச்சர் நேரு
ஒரு நாளும் இல்லாத அளவில் மாநகர பகுதியில் ஒவ்வொரு மாநகராட்சிக்கும், ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒவ்வொரு ஆண்டும் 24 கோடி என்ற அளவிலே பணிகளுக்காக பணம் ஒதுக்கி தந்து கொண்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் நகர்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 85 கோடி மதிப்பீட்டில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், டார்லிங் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாக நிலையம், பன்னாட்டு வாகன நிறுத்தம், பொருட்காட்சி திடலில் தொழில் முனைவோர் கூட்ட அரங்கம் என மாநகர் பகுதியில் 135.18 கோடி மதிப்பில் திட்ட பணிகள், ரூபாய் 12.05 கோடி மதிப்பீட்டில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகைகுளம் மற்றும் 12 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா 423.13 கோடி மதிப்பீட்டில் களக்காடு நகராட்சி மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது:
நெல்லை மாநகராட்சியில் சீர்மிகு திட்டப்பணிகள் 40 சதவிகிதம் தான் முடிந்திருந்தது, ஆனால் திமுக பொறுப்பேற்ற பிறகு முடிக்கிவிடப்பட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதன் பேரில் தற்போது 95% பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாநகராட்சியில் மட்டும் திமுக பொறுப்பேற்ற பின் 2555 மதிப்புள்ள 1763 பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில்1129 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 15 நீரேற்று நிலையங்களில் இருந்து 75 எம்ல்டி குடிநீர் பெறப்பட்டு 135 எல்பிசிடி வீதம் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 27 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நெல்லை நகரம் மற்றும் என்ஜிவோ பி காலனி தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். மாநகரில் 936 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களால் சேதமடைந்து 350 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூபாய் 128 கோடியில் பராமரிக்க எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது வரை 83 கோடி அளவிலே 180 கிலோ மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடைபெறுகின்றன. நெல்லை நிலை 2 பாதாள சாக்கடை திட்ட பணிகள் 296 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 94 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. புதிய பாதாள சாக்கடை திட்ட பணி 664 கோடியில் 3 சிப்பங்களாக பணிகள் பல்வேறு நிலையில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி தந்து திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு நாளும் இல்லாத அளவில் மாநகர பகுதியில் ஒவ்வொரு மாநகராட்சிக்கும், ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒவ்வொரு ஆண்டும் 24 கோடி என்ற அளவிலே பணிகளுக்காக பணம் ஒதுக்கி தந்து கொண்டிருக்கிறார். நெல்லை மாநகராட்சிக்கு கிட்டத்தட்ட 357 கோடிக்கும் 3 நகராட்சிக்கும் 146.79 கோடி, பேரூராட்சிக்கு 550 கோடியும் இந்த ஆண்டு வழங்கி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. முதல்வர் ஏற்கனவே இந்த துறையில் அமைச்சராக இருந்ததால் அவருக்கு இந்த துறையில் எது தேவை என அறிந்து எந்த மக்களுக்கு எது தேவை தர வேண்டும் என அறிந்து நிதி ஒதுக்கி தந்துள்ளார். அவர் காட்டும் வழியில் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி முடிக்கப்பட்ட பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.