திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என பிரதமர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்! திமுகவிற்கு தனி வரலாறு உள்ளது - அமைச்சர் ஐ.பெரியசாமி
எமர்ஜென்சி காலத்தில் 500 திமுகவினரை சிறையில் அடைத்தால் திமுக அழியும் என நினைத்தார்கள். திமுக என்றும் மக்கள் மனதில் உள்ளது. திமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது.
![திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என பிரதமர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்! திமுகவிற்கு தனி வரலாறு உள்ளது - அமைச்சர் ஐ.பெரியசாமி Minister I Periyasamy says Prime Minister speaks without knowing the history that the DMK will be destroyed! DMK has its own history - TNN திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என பிரதமர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்! திமுகவிற்கு தனி வரலாறு உள்ளது - அமைச்சர் ஐ.பெரியசாமி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/497696152d52735cff00073d7548580d1709617701212571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பேட்டை மல்லிமார் தெருவில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி்.எம் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது உடனுக்குடன் அமைச்சர்களை அனுப்பி அனைத்து உதவிகளையும் தமிழக முதலமைச்சர் செய்ய உத்தரவிட்டார். மத்திய அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வெள்ள பாதிப்புகளை பார்ப்பது போல் நடித்து மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். சல்லி பைசா கூட இதுவரை வெள்ள பாதிப்புக்கான நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரணமும், வீடு இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் அதனை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் பலகோடி செல்கிறது. அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தின் வரி வருவாய் எல்லாம் மத்திய அரசு வாங்கிக் கொண்டு ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற அனைத்து தவறுகளும் செய்து அரசை ஏமாற்றும் மாநிலங்களுக்கு வரியை வாரி வழங்கி கொடுப்பது நியாயமா என மக்களே சொல்ல வேண்டும். 450 கோடி ரூபாய் நிதி வெள்ள பாதிப்பு களுக்காக ஒன்றிய அரசு ஒதுக்கியது. சிறிய சிறிய பாதிப்புகளை சரி செய்ய ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி மட்டுமே அதுவாகும். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு மத்திய அரசு நெல்லை மக்களுக்கு அல்வாவை கொடுத்துவிட்டது. வரும் தேர்தலில் ஒரு ஓட்டு கூட மோடிக்கு போடக்கூடாது. திருநெல்வேலி மக்கள் அவர்களுக்கு அல்வா கூட கொடுக்கக் கூடாது. அவர்கள் ஜீரோவாக தான் இருக்க வேண்டும். எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் ஆண்களுக்கு கல்லூரியில் படிக்க ரூபாய் 1000 திட்டத்தை கொண்டுவர வேண்டும் என இந்த பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் நிதியை ஒதுக்கியுள்ளார். அனைத்து துறைகளிலும் சமூக நீதி திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கி வரும் நிலையில் கூடுதலாக 10 லட்சம் மகளிருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. எந்த ஆட்சியிலும் சொன்னதை செய்தது கிடையாது. சொன்னதையும் சொல்லாததையும் செய்து கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சியாக தான் உள்ளது.
மக்களுக்கு எல்லாம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட தமிழக முதல்வரை செயல்பட விடாமல் நிதி ஆதாரத்தை முடக்கிவிட நினைக்கிறார்கள். கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் தினமும் கொடுக்கப்பட வேண்டும். மூன்று, நான்கு மாதங்களாக அது கொடுக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு இனியும் வரக்கூடாது. நமக்கு வரும் நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் இருந்து தேர்தல் நேரத்தில் வழங்கினால் அது நமக்கு சாதகமாகும் என அவர்கள் நினைக்கிறார்கள். புதிய கொள்கை மற்றும் லட்சியத்தால் மறைமுகமாக மதச்சார்பின்மையை மாற்ற பாஜக நினைக்கிறது. ஜனநாயகத்தின் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. நமக்கான உரிமைகளை மத்திய அரசு பறிக்கும்போது நாம் வாழாவட்டியாக இருக்க முடியாது. நமக்கான உரிமைகளை பெற்றிட வேண்டும். திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என பிரதமர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். பிரதமர் வந்து 10 ஆண்டுகள் தான் ஆகிறது. திமுகவிற்கு தனி வரலாறு உள்ளது. எமர்ஜென்சி காலத்தில் 500 திமுகவினரை சிறையில் அடைத்தால் திமுக அழியும் என நினைத்தார்கள். திமுக என்றும் மக்கள் மனதில் உள்ளது. திமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. ஜாதி, மதம் வைத்து சந்தர்ப்பவாத கூட்டணியை எதிர்தரப்பினர் அமைத்துள்ளனர். அவர்களது கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை. அரசியல் கொள்கைகளை அடிப்படையாக வைத்து திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)