தென்காசி காதல் திருமணம், கடத்தல் விவகாரம்; பெண்ணின் பரபரப்பு வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்
29.10.22 அன்று மைத்திரிக் பட்டேலுடன் திருமணம் நடைபெற்றதாகவும், என்னை யாரும் கடத்தவில்லை, வினித் என்னை ஆசை வார்த்தை கூறி மயக்கி திருமணம் செய்து கொண்டு கொண்டார்.
![தென்காசி காதல் திருமணம், கடத்தல் விவகாரம்; பெண்ணின் பரபரப்பு வாக்குமூலத்தால் திடீர் திருப்பம் kidnapping case of the daughter who got married for love in Tenkasi took a sudden turn due to sensational confession TNN தென்காசி காதல் திருமணம், கடத்தல் விவகாரம்; பெண்ணின் பரபரப்பு வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/01/0b7f6c54387767fc6f970ed4615f28921675233907761109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த குஜாரத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பட்டேல், வினித் என்பவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் பொங்கல் அன்று கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகவும் குற்றாலம் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தமிழக முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து குற்றாலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து கிருத்திகாவை அவரது கணவர் வினித் காரில் அழைத்து சென்ற போது தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் அவர்களின் காரை வழிமறித்து கிருத்திகாவின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் துரத்த ஆரம்பித்தனர். பின் வினித்தை பெண் வீட்டார் தாக்கிவிட்டு கிருத்திகா பட்டேலை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கிருத்திகா பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
அதில் என்னுடைய பெயர் கிருத்திகா பட்டேல். நான் நல்லா இருக்கேன், பாதுகாப்பாக தான் இருக்கேன். என்னுடைய கல்யாணம் ஏற்கனவே மைத்தீரிக் பட்டேலுடன் நடந்துள்ளது. நான் அவருடனும், பெற்றோருடனும் நல்லா தான் இருக்கிறேன். என் மீது எந்த விதமான அழுத்தமோ, டார்ச்சரோ கிடையாது. இது தொடர்பாக அங்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது வேண்டாம், இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். யாருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. என்ன நடந்ததோ அது என்னுடைய இஷ்டப்படி தான் நடந்தது என பேசியுள்ளார்.
மேலும் 29.10.22 அன்று மைத்திரிக் பட்டேலுடன் திருமணம் நடைபெற்றதாகவும், என்னை யாரும் கடத்தவில்லை, வினித் என்னை ஆசை வார்த்தை கூறி மயக்கி திருமணம் செய்து கொண்டு கொண்டார். என் பெற்றோர் என்னை கடத்தியதாக வினித் தவறாக புகார் அளித்துள்ளார் என தனது வாக்குமூலத்தை காவல்துறைக்கு அளித்து உள்ளார். மேலும் அதில் தான் மைத்தீரிக் பட்டேலுடன் திருமணம் செய்து கொண்ட சான்றிதழையும் இணைத்து அனுப்பி உள்ளார். இந்த வாக்குமூலம் மற்றும் வீடியோவில் அளித்துள்ள வாக்குமூலத்தால் இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தென்காசியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)