Magalir Urimai Thogai: மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் ரூ.1000-ஐ எடுத்துவிடாதீர்கள் - பிரதமருக்கு சபாநாயகர் வேண்டுகோள்
தகுதி இருந்து யாரும் நிராகரிக்கப்பட்டால் அடுத்த 30 நாட்களில் எங்களது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நிச்சயமாக தகுதி இருப்பின் தருவேன் என்று சொல்கின்ற முதல்வர் தமிழ்நாட்டில் நம்முடைய முதல்வரை விட யாரும் இருக்க முடியாது
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்களால் இந்த திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தகையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் விழாப் பேரூரையாற்றிப் பேசுகையில், ”ஒருநாள், இரண்டு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் உங்களது வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் மகத்தான திட்டத்தை முதல்வர் தந்துள்ளார். 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 1 கோடியே 55 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வழங்கப்படுகிறது.. அதில் மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் வெளிப்படையாக அவர்களது கவனத்திற்கு இந்த தகுதி இல்லாத காரணத்தினால் உங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அறிவித்து இருக்கிறார் என்றால் இதை விட ஜனநாயகம் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது, இந்த அளவு ஜன நாயகத்தோடு சாதி, சமயம், இனம், கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இதை போல தகுதி இருந்து யாரும் நிராகரிக்கப்பட்டால் அடுத்த 30 நாட்களில் எங்களது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நிச்சயமாக தகுதி இருப்பின் தருவேன் என்று சொல்கின்ற சவால் விடுகின்ற முதல்வர் தமிழ்நாட்டில் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினை விட யாரும் இருக்க முடியாது..
கிராமப்புரத்தில் 500 முதல் ஆயிரம், நகர்ப்புறத்தில் 2000 முதல் 5 ஆயிரம், சிட்டிகளில் 3000 முதல் 10 ஆயிரம் என வங்கிக்கு வங்கி குறைந்தப்பட்ட வைப்பு தொகையாக இருக்க வேண்டும் என்ற வேறுபாடுகள் இருக்கும். அது குறைவாக இருந்தால் அபராதமாக கடந்த 08.08.23 இல் நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் கூறும்பொழுது 21 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது... வங்கி கணக்கு வைத்துள்ள நபர்களின் வங்கி கணக்கில் குறைந்த பட்ச வைப்பு தொகை இல்லாதது, அதிக முறை ஏ.டி.எம் பயன்பாடு, குறுஞ்செய்தி அனுப்பியது என மத்திய அரசு அபராதத் தொகையாக வங்கிகள் மூலம் உங்கள் கணக்கில் இருந்து உங்கள் அனுமதியின்றி எடுத்திருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் கூறியுள்ளார். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுக்கு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் வந்திருக்கிறது.. எனவே பிரமதர் அவர்களையும், நிதி அமைச்சர் அவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன், ஏழைகளுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயில் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் தயவு செய்து அபராதத் தொகையை எடுத்து விடாதீர்கள் என்பதையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்