இந்திய நாட்டுக்கே பாதுகாப்பாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாத்தவர் கலைஞர் - அமைச்சர் பெரியகருப்பன்
இந்திய நாட்டுக்கே பாதுகாப்பாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாத்தவர் கலைஞர் - அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கவியரங்கத்தை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கவிஞர் அறிவுமதி தலைமையில் கவிஞர்கள் கலாபிரியா, சல்மா ஆகியோர் ஒருங்கிணைப்பில் தொடங்கியது. இதில் கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, இளங்கோ கிருஷ்ணன், நேசமித்திரன், கபிலன், ரோஸ்லின், வித்தியா, தஞ்சை இனியன், சுசித்ரா மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் இலக்கிய படைப்புகள், அவரின் சாதனைகள், அவர் தந்த திட்டங்களை கவிதையாக தந்தனர். பின்னர் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது . மேலும் எழுத்தாளர் கலைஞர் குழு உறுப்பினர்கள், கவிஞர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக விழாவில் அமைச்சர் கயால்விழி செல்வராஜ் பேசுகையில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்று தந்த பெருமை கலைஞரைச் சேரும். எழுத்துக்களால் சமூதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், அவரது கையெழுத்து சட்டமாக திட்டமாக வந்ததால் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது என கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழ்நாட்டை தலை நிமிர செய்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று தன் உயிரினும் மேலான் தாய் மொழிக்கு வாழ்வு தந்து இன்றும் மொழியால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைஞர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு காரணம் கலைஞர். இந்திய துணைக்கண்டத்தில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவிற்கே வழிகாட்டியவர் முதலமைச்சராக தமிழ்நாட்டில் விளங்கியவர் கலைஞர்.
ஒரு மாநிலத்தின் கட்சிக்குதான் கலைஞர் தலைவர் என்றாலும், இந்திய அரசியலை பற்றி என்ன சொல்கிறார், என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றெல்லாம் அகில இந்திய கட்சி தலைவர்கள் அவரது வாய் மொழியை அவரது அசைவை எதிர்பார்த்து இருப்பார்கள். அத்தனை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை படைத்து தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே பாதுகாப்பாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாத்தவர் கலைஞர். இன்று திமுகவின் 6- வது முதல்வராக பொறுப்பேற்று பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.
தலைமையுரை ஆற்றிப்பேசிய சபாநாயகர் அப்பாவு, மனிதநாகரிகம் முதன் முதலில் தோன்றியது. பொருநை ஆற்றில் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் 35 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் பாதுகாப்பாக இருப்பதுடன் அவர்களுக்கு விருது, பொற்கிழி, என அரசால் கவுரவிக்கப்பட்டும் வருகிறார்கள். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது இதற்கு கலைஞரின் பேனாதான் காரணம் என கூறினார்.