இந்தியா கூட்டணி ஒற்றுமையின்றி சீர்குலைந்துள்ளது; பொய்த்துபோய்விடும் - ஜான்பாண்டியன் விமர்சனம்
தமிழகத்தை மட்டும் வைத்து இந்தியாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியாது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டமும் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன் கூறியதாவது, தமிழகம் முழுவதும் ஜாதி மத பேதமின்றி அனைத்து அரசியல் கட்சியினரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள், அனைவருக்கும் மனமுவந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்டாயம் போட்டியிடும். நான் போட்டியிடுகிறேனா அல்லது எங்களை சார்ந்தவர்கள் போட்டிடுவார்களா? என்பது தேர்தல் அறிவித்த பிறகு கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடி அதன் அடிப்படையில் போட்டியிட இருக்கிறோம். தேர்தலின் போது உள்ள அரசியல் சூழலை பொறுத்து குறித்து அதிமுகவுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது குறித்து முடிவு எடுக்கபடும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர் போன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. பாஜகவோடும், அதிமுகவோடும் நட்புடன் தான் இருந்து வருகிறோம். தேர்தல் கால கட்டத்தில் தான் யாருடன் பயணிப்பது என்பது செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுப்போம். நாங்கள் தேசியத்தில் பயணிப்பதா? அல்லது தமிழகத்தில் பயணிப்பதா என்பதை அந்த கால கட்டத்தில் முடிவெடுப்போம். இப்போது சொல்ல முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வரும் வரை ஒவ்வொரு மண்டலமாக இந்த கூட்டம் நடைபெறும். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து கேள்விக்கு சிலர் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஒரு சிலர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறார்கள் முடிவு வரட்டும் பார்க்கலாம். இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அவர்களே ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள், சீர்குலைந்து இருக்கிறது. மம்தா வரவில்லை என்று சொல்லிவிட்டார், தெலுங்கானா உங்களோடு சேரவே மாட்டேன் என்கிறார்கள், கெஜ்ரிவால், யாதவ் முடியாது என்கிறார்கள், அப்படியென்றால் யார் தான் அந்த கூட்டணியில் இருக்க முடியும் என்பதை கடைசியில் தான் முடிவெடுக்க முடியும். இப்போது வரை ஒருவரை ஒருவர் ஒற்றுமையில்லாமல் தான் இருக்கின்றனர். அந்த சூழல் உருவாகிற மாதிரியும் எனக்கு தெரியவில்லை. எல்லாரும் எதிர்பார்க்கின்ற படி பிரதமர் யார் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல கூடிய தகுதி கூட அவர்களிடம் இல்லை. அப்படியிருக்கும் போது அது பொய்த்துதான் போகும் என்று விமர்சித்தார். தமிழகத்தை மட்டும் வைத்து இந்தியாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.