எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு
’’கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 25 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது’’
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தாக்குதலால் மக்கள் வேதனை அடைந்து உள்ளனர் ,கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 25 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் களப்பணியாளர் மூலமாகவும் சோதனைச்சாவடி மூலமாகவும் நேற்று 3256 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 91 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 48 பேரும் பெண்கள் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 13 பேருக்கும், கிள்ளியூர் தாலுகாவில் 3 பேருக்கும், குருந்தன்கோடு தாலுகாவில் 10 பேருக்கும், மேல் புறத்தில் 5 பேருக்கும், முஞ்சிறையில் 9 பேருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 4 பேருக்கும், திருவட்டாரில் 11 பேருக்கும், தோவாளையில் ஒருவருக்கும், தக்கலையில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து வந்த ஒருவரும் தென்காசியில் இருந்து வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.நாகர்கோவில் நகரில் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 10 முதல் 15 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பறக்கை செட்டித்தெரு பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 30 பேரின் சளி மாதிரிகளை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சேகரித்தனர். அதற்கான முடிவுகள் இன்று வெளியானது. அந்த பகுதியில் தாய், மகன் உள்பட மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வசித்து வந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசியைப் செலுத்தி அரசின் வழிகாட்டு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன நிலையில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.