மீண்டும் உயரப்போகுது தீப்பெட்டி விலை..!? புதிய முடிவால் சிக்கலில் உற்பத்தியாளர்கள்!
குளோரேட் 1 கிலோ ரூ 90ல் இருந்து 120 ரூபாயாகவும், பேப்பர் 1 கிலோ ரூ 35யில் இருந்து 55 ரூபாய்க்கும், மெழுகு 1 கிலோ 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், பாஸ்பரஸ் 1 கிலோ 550 ரூபாயில் இருந்து 900 ரூபாயகவும் உயர்வு
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, நெல்லை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாளாக இருப்பது தீப்பெட்டி உற்பத்தி தான்.
தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன. தீப்பெட்டி தொழிலை நம்பி நேரிடையாக மற்றும் மறைமுகமாக என சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழில் 90சதவீதம் பெண்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தீப்பெட்டி தொழில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ 1க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை ரூ 2ஆக உயர்த்தினர்.
இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கி வரும் நிலையில் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளனர். தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை 1கிலோ ரூ 40 ல் இருந்து 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குளோரேட் 1 கிலோ ரூ 90ல் இருந்து 120 ரூபாயாகவும், பேப்பர் 1 கிலோ ரூ 35யில் இருந்து 55 ரூபாய்க்கும், மெழுகு 1 கிலோ 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், பாஸ்பரஸ் 1 கிலோ 550 ரூபாயில் இருந்து 900 ரூபாயகவும் உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் மூலப்பொருகள் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் உற்பத்தி செலவும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தீப்பெட்டி விலையை ரூ 2 ஆக உயர்த்தி உள்ள நிலையில் அதனை உயர்த்த முடியாது என்பதால் மூலப்பொருள்களின் விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலுக்கு தற்பொழுது 300 ரூபாய் என விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1ந்தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ 350க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாளுக்குநாள் உயர்ந்து வரும் மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும், கடந்த 3 மாதங்களில் 30 முதல் 40 சதவீதம் மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லமால் தீப்பெட்டி பண்டல்களின் விலையை ரூ 50 உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மூலப்பொருள்களின் விலை உயர்வினை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுக்கவில்லை என்றால் தீப்பெட்டி ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்