‘ஆளுநருக்கு என்ன கமிட்மென்ட் இருக்கோ முதல்வரிடம் இவ்வாறு ரியாக்ட் செய்கிறார் என தெரியவில்லை’ - அப்பாவு
பெரியார், அண்ணா, கலைஞர் பெயரை சொல்லி போர்டு வைக்கும் அளவிற்கு இருப்பதால் திராவிட மாடல், திராவிட கட்சிகளை பார்த்தால் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் - அப்பாவு
நெல்லை மாவட்டம் பாலாமடை பகுதியை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த 22ஆம் தேதி வேனில் சென்ற போது தேனி மாவட்டம் போடி மெட்டு அருகே உள்ள தோன்றி மலை என்னும் இடத்தில் விபத்து ஏற்பட்டு தலைகீழாக வேன் கவிழ்ந்து ஆறு பேர் பலியானார்கள். இதில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த சிறுவர்களான சுசிந்தரன் (8), சுரேந்திரன் (6), மேல பாலமடையை சேர்ந்த ஜானகி, பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த பெருமாள் ஆகியோருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்து தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சீதாலட்சுமி மற்றும் இந்திராணி ஆகியோருக்கு தலா ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கினார். தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நீண்ட நாட்களுக்கு கழித்து விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவை தலைவர் இருக்கையில் ஆளுநர் தான் இருந்தார். நான் பக்கத்தில் தான் இருந்தேன். மைக்கும் அன்று அவரிடம் தான் இருந்தது. அமைச்சரவை கூடி ஆளுநர் உரையை ஆளுநருக்கு அனுப்பி அவர் பார்த்து படித்து திருத்தங்கள் செய்த பின்பு ஒப்புதலோடு தயாரிக்கப்பட்டது. அதன் பின் அதில் மாற்றி அம்பேத்கர், அண்ணா, பெரியார் போன்ற சில தலைவர்களின் பெயர்களை நீக்கி மற்றும் சில பெயர்களை சேர்த்தும் வாசிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை. அப்போது சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி எல்லோருமே ஓரளவிற்கு தவறான வாசிப்பு இருப்பதை சலசலத்து சொல்லும் போது முதல்வர் கையசைத்து அமைதியாக இருக்கும்படி சொன்னார். ஆளுநர் உரை என்பது அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அமைச்சரவை என்ன சொல்கிறாரோ அது தான் என அனைவருக்கும் தெரிந்த விசயம்.
ஆளுநர் அப்போது உதவியாளரிடம் ஏதோ கேட்டார். எனக்கு தெரியவில்லை, அதன் பின் அவர் என் முன்னாள் சென்று என்னை தாண்டி தான் அவரிடம் கேட்டார். பேரவை தலைவர் முன்னாள் செல்லக்கூடாது என்ற சட்டப்பேரவை மரபையும் மீறி ஆளுநர் அவரது பாதுகாப்பு அதிகாரியை அழைத்து என்ன பேசுகிறார் என அவரிடம் கேட்டார். அதற்கு பாதுகாப்பு அதிகாரி ஏதோ பதில் சொன்னார். சொன்ன வேகத்திலேயே ஆளுநர் எழுந்து சென்று விட்டார். இதுதான் நடந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. அதற்காக மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் & இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகத் தெளிவாக சொல்லி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை, சட்டமன்றம் மக்களுக்காக கொண்டு வருகின்ற மசோதாவை எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டுமோ அவ்வாறு செயல்பட வேண்டும். பிரதிநிதிகள் மூலம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது கவர்னரின் கடமை. தீர்மானத்தில் சந்தேகங்கள் இருந்தால் அதற்கான விளக்கங்களை கோரலாம். இல்லையென்றால் குடியரசு தலைவருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பலாம். தீர்மானங்களை நிறுத்தி வைப்பது சரியானதாக இல்லை.
உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடர்பாக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பது நன்றாக இல்லை. நிறுத்தி வைக்கப்பட்டதாக சொன்ன மசோதாக்கள் முற்றுபெற்றதாக ஆளுநர் சொன்னவை. மீண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது சில மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதையும் அனைவரும் அறிவார்கள். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு உடனே ஒப்புதல் கொடுத்தார் ஆளுநர்.
ஆளுநருக்கு என்ன கமிட்மெண்ட் இருக்கோ முதல்வரிடம் ரியாக்ட் செய்கிறார் என தெரியவில்லை.. ஆனால் திராவிட மாடல் என்று சொன்னால் கடுமையான பயத்தை அவர்களிடம் வெளிப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டில் தான் இதுவரை இருந்தது. இந்தியாவில் சராசரி பட்டப்படிப்பு பெண்கள் 26% என்றால் தமிழ்நாட்டில் பட்டதாரிகளாக படித்துக் கொண்டிருப்பவர்களை கணக்கிட்டு பார்த்தால் 71% ஆக உள்ளது. அதற்கு காரணம் திராவிட மாடல், திராவிட கட்சி.. சமூக நீதி.. மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு ஓபிசி இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய முதல்வர் நீதிமன்றம் வரை சென்று போராடி இந்தியாவில் இப்போது 4022 பேர் எம்பிபிஎஸ் மேல்படிப்பு படிக்கின்றனர். அதே போல பல் மருத்துவம் படிக்க 1000 பணியிடம் கிடைக்க ஏற்பாடு செய்தது இன்றைய முதல்வர் தான். அது மிகப்பெரிய அதிர்வலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.
உத்திர பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களில் சமூக நீதிக்கு பெரிய தாக்கம் இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் பெயரை சொல்லி போர்டு வைக்கும் அளவிற்கு இருப்பதால் திராவிட மாடல், திராவிட கட்சிகளை பார்த்தால் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கும். இந்தியா முழுவதும் இருக்கிற மாநிலங்களில் 21 க்கும் மேற்பட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி கொள்கை பற்றி தமிழ்நாடு வழியை பின்பற்ற வேண்டும் என்று ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டனர்.. அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்தியா முழுவதும் தமிழ் நாட்டின் சமூக நீதி செல்வது அவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கும் அந்த பயத்தில் சொல்வார்கள்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்