(Source: Poll of Polls)
'ஏழுகடல் துறையின் ஏக அடைக்கலத்தாய்' தூயபனிமயமாதா தூத்துக்குடி வந்த வரலாறு
தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலயமானது பேராலயம் என்ற 30-7-1982 அன்று சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.
தூத்துக்குடி தூயபனிமயமாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சமூக நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலய திருவிழா ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
தங்கத்தேரோட்டம்
விழாவின் சிகர நாளான ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் அன்னையின் தங்கத்தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். சில ஆண்டுகளில் முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில், ஆலய திருவிழாவின் சிகர நாளில் அன்னையின் தங்கத்தேரோட்டம் நடத்தப்படும்.அதன்படி, தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடத்தப்படுகிறது.
வரலாறு:
தூத்துக்குடியில் கடந்த 468 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், பரதர்குல மக்களின் சரித்திர வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து உள்ளது. அது பரதகுலத்தாய் என்று அழைக்கப்படும் சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா, தூத்துக்குடி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் ஆகும். கடந்த 1532 முதல் 1537-ம் ஆண்டு வரையிலும் முத்துக்குளித்துறையின் பரதவர் இனத்தினர் பெருமளவில் கத்தோலிக்க திருமறையை தழுவினர். தொடர்ந்து 1538-ம் ஆண்டு புனித பேதுரு ஆலயம் முதலாவது பங்கு ஆலயமாக உருவானது. பேதுரு கொன்சால்வஸ் முதல் பங்குதந்தையாக பணியாற்றினார்.
1542-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கடற்கரை கிராம மக்களால் ஞானதகப்பன் என்று அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியார் இங்கு வந்து மக்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தை போதித்து அவர்களை வேதத்தில் உறுதிப்படுத்தினார். இப்பகுதி மக்களுக்காக பிலிப்பைன்சில் உள்ள மணிலா தீவில் கன்னியர் மடத்தில் இருந்த அன்னையின் சொரூபத்தை புனித பிரான்சிஸ் சவேரியார் கேட்டார். அவர் இதோ உங்களது தாய் என்று மக்களுக்கு பனிமயமாதாவை சுட்டிக் காண்பித்தார்.
கோடை மின்னலை தாங்கிய அன்னை:
அன்னையின் சொரூபம் கடந்த 9-6-1555 அன்று சந்தலேனா என்ற கப்பல் மூலம் தூத்துக்குடியை வந்தடைந்தது. அன்னை வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய 7 பெரிய கடற்கரை கிராமங்களின் தாயாக விளங்கியதால் ஏழுகடல் துறையின் ஏக அடைக்கலத்தாய் என்று அழைக்கப்படுகிறார்.தூத்துக்குடி அதன் சுற்றுப்புறங்களை கடந்த 1707-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தாக்கிய கோடை மின்னலை அன்னை தன் மீது தாங்கிக்கொண்டு மக்களை காத்தருளினார். சேதாரம் ஏதும் இன்றி அன்னையின் திருச்சொரூபம் கருநீல வண்ணமானது.
அன்னையின் திருவுருவம் மீது படிந்து இருந்த கறைகளால் கலக்கமுற்ற இறைமக்கள் தொடர்ந்து 40 நாட்கள் பரிகார பக்தி முயற்சிகளில் ஈடுபட்டனர்.இறுதிநாள் செபத்தில் கலந்துகொண்ட ஏசுசபை மாநில தலைவர், முடிவில் பக்தியோடு தாயின் மேனியை வெண்ணிற துணியால் துடைக்க, அற்புதமாக கறைகள் அகன்று பிரகாசமாக அன்னையின் திருச்சொரூபம் தெய்வீக களையோடு சாந்தமே உருவான அருள்பாலிக்கும் தாய்மை உருவை பெற்றது.
அதன்பிறகு தற்போது அமைந்துள்ள பெரிய கோவிலுக்கு கடந்த 1712-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி விஜிலியுஸ் மான்சியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு 1713-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்னையின் புதிய ஆலயம் திறக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காலத்தில் ஆலய புதிய கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதனால் தற்போது ஆலயத்தின் தோற்றம் ஒருபுறத்தில் கோத்திக் கோபுரமாகவும், மறுபுறம் தேர்வடிவ கோபுரமாகவும், முகப்பு, முன்மண்டபங்கள் வேறு பாணி என்று பல்வேறு கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கி பறைசாற்றும் கூட்டு கட்டிடக்கலை கண்காட்சி சின்னமாக ஆலயம் நிமிர்ந்து நிற்கிறது.
1834-ம் ஆண்டு சூசைநாதர் முயற்சியால் அன்னையின் ஆலயத்தில் வெண்சலவை கல்பீடம் அமைக்கப்பட்டது. 1895-ம் ஆண்டு இந்த பேராலயம் மயிலை மறைமாவட்ட ஆளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. 1922-ம் ஆண்டு மாதா கோவில் கோபுரம் கட்டப்பட்டது. 1923-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கிய தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆளுகையின் கீழ் 1930-ம் ஆண்டு பனிமயமாதா ஆலயம் ஒப்படைக்கப்பட்டது.1960-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி தூத்துக்குடி ஆயர் தாமஸ் பர்னாந்து, பங்குத்தந்தை எஸ்.எம்.தல்மெய்தா முயற்சியாலும், பரிந்துரையாலும் உரோமை மேரி மேஜர் பேராலயத்துடன் இணைப்பு பேராலயமாக திருத்தந்தை 23-ம் அருளப்பரால் பிரகடனப்படுத்தப்பட்டது. 30-7-1982 அன்று தூய பனிமயமாதா ஆலயமானது பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த 1806-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதன் முதலாக தங்கத்தேரில் அன்னை நகரில் பவனி வந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக முக்கிய விழாக்களை மையமாக கொண்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. தற்போது 16வது முறையாக தங்கத்தேரில் அன்னையின் திருவீதி உலா தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.