திருமலாபுரத்தில் இந்தெந்த நோக்கங்களுக்காக அகழாய்வு செய்ய திட்டம் - தென்காசி ஆட்சியர் தகவல்
வாழ்வியல், கலை, கலாச்சாரம், மட்பாண்டங்கள் மற்றும் குடியேற்றமுறைப்பற்றி அறிதல், இரும்புக்காலம் & தொடக்க வரலாற்றுக்காலங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிதல்.
வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில் நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கடந்த ஆண்டு 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தற்போது 2024 இல் 8 இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக 1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் - பத்தாம் கட்டம்
2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - 3 ஆம் கட்டம்
3. கீழ்நமண்டி, திருவ்ண்ணாமலை மாவட்டம் - 2 ஆம் கட்டம்
4. பொற்பனைக்கோட்டை, புதுகோட்டை மாவட்டம் - 2 ஆம் கட்டம்
5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் - முதல்கட்டம்
6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல்கட்டம்
7. கொங்கல் நகரம், திருப்பூர் மாவட்டம் - முதல்கட்டம்
8. மருங்கூர், கடலூர் மாவட்டம் - முதல் கட்டம் ஆகிய எட்டு இடங்களிலும் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கே இத்தொல்லியல் மேடு அமைந்துள்ளது. திருமலாபுரம் மற்றும் உள்ளாரிலிருந்து மேற்காக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கில் சாலை அமைப்பதற்காக மண் எடுக்கும் பொழுது ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் வெளிக்கொணரப்பட்டன. இத்தொல்லியல் மேடானது சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் கற்பதுக்கை மற்றும் முதுமக்கள் தாழிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட மட்கிண்ணங்கள் மற்றும் மூடிகளும், கருப்பு - சிவப்பு பானை, சிவப்பு நிற பானை, கருப்பு நிற பானை, மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை, ஈமத்தாழிகள், என அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளும் அதன் கீழாக ஒரு வட்டத்திற்குள் இரண்டு கோடுகள் ஒன்றையொன்று குறுக்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளுக்கு நடுவிலிருந்து மூன்று கோடுகள் தனித்தனியாக பிரிந்து செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. ஒருசிலத் தாழிகள் மண் தோண்டப்பட்ட குழிகளின் பக்கவாட்டில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த தோற்றத்தைக் காணும் பொழுது தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் கூழாங்கற்கள் பரப்பப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. சில மனித எலும்புகளும் கிடைத்துள்ளன. செம்பினாலானக் கிண்ணம், இரும்பினாலானப் பொருட்கள் (ஈட்டி, வாள், குறுவாள், கத்தி) போன்றவை முக்கிய தொல்பொருட்களாகும். குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், மட்பாண்ட ஓடுகள் என அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதன்மூலம் இத்தளத்தில் உள்ள தன்மைகளை புரிந்து கொள்ளுதல், பெருங்கற்கால புதைவிடத்தின் எல்லையைக் கண்டறிதல், இரும்புக்கால வாழ்விடப்பகுதியை கண்டறிதல், பெருங்கற்கால புதைவிடத்தை பற்றிய கூடுதல் சான்றுகளை வெளிக்கொணருதல், இரும்புக்கால மக்களின் ஈமச்சடங்கைப் பற்றி அறிதல், மேலும் இப்பகுதியின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மட்பாண்டங்கள் மற்றும் குடியேற்றமுறைப்பற்றி அறிதல், இரும்புக்காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக்காலங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிதல் போன்ற முக்கிய நோக்கங்களுடன் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.