கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மீது திமுக உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம்.! உட்கட்சி பூசலின் உச்சகட்டம்..!
இன்றைய கூட்டத்தில் போதிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தலைவர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ஹபிபுர் ரகுமான், துணை தலைவராக ராசையாவும் இருந்து வருகிறார். இதில் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் திமுக 15 , அதிமுக 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, பாஜக 3, அமமுக 1, எஸ்டிபிஐ 1 என கட்சிகளின் கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி நகர்மன்ற கூட்டம் நடைபெற இருந்த நிலையில் முறையாக கால அவகாசம் வழங்கவில்லை எனக்கூறி கவுன்சிலர் தீவான் மைதீன் என்பவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் கால அவகாசத்துடன் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடையநல்லூர் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இன்று காலை நகர் மன்ற கூட்ட அரங்கில் வைத்து தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமையில் கூட்டம் தொடங்கிய நிலையில் தலைவர் மற்றும் திமுகவை சேர்ந்த முகமதுஅலி, சுந்தரமகாலிங்கம் பாஜகவை சேர்ந்த சங்கரநாராயணன், ரேவதி பாலிஸ்வரன் ஆகிய 4 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் போதிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தலைவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைவர் ஹபீபுர் ரகுமான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நகராட்சி ஆணையாளரிடம் திமுக கவுன்சிலர்கள் முகைதீன் கனி திவான் மைதீன், முருகன் உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் உட்பட 29 - கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட மனுவை வழங்கினர், அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூட்ட அஜெண்டாவில் மாமன்றத்திற்கு வரப்பெற்ற வருவாய்கள் மற்றும் மாமன்றதால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் செலவு சீட்டு எண்கள் வாரியாக தயார் செய்யப்படாமல் வழங்கப்பட்டு வருகிறது. மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலே பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது. மேலும் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அஜெண்டாவில் இல்லாத பல்வேறு தீர்மானங்களை மன்ற கூட்டம் நடைபெற்ற பிறகு முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஒப்பந்தங்கள் மறைமுகமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியும் அந்த பகுதிகளுக்கு சாலை வசதி செய்து கொடுக்காமல் மன்ற பணத்தை சுயநலத்திற்காக நகர்மன்ற தலைவருக்கு சொந்தமாக வியாபார நோக்கத்தில் வாங்கி போடப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிளாட்டுகளுக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சரியான பதில் இல்லை ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களை பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று அவர்களை பணி அமர்த்தியது. மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்ற கூலியை முறையாக வழங்காமல் அதில் முறைகேடு செய்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தற்போதைய நகர மன்ற தலைவராக இருக்கும் ஹபிபுர் ரஹ்மான் மீது வந்த நிலையில் மேலும் மேலும் இந்நகர்மன்றத்திற்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, பொது சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவைகள் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் குறித்து இம்மாமன்ற உறுப்பினர்களால் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மனுக்களை எந்த மாமன்ற கூட்ட அஜெண்டாவிலும் சேர்க்காமல் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமலும் பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றார். எனவே தலைவரின் இத்தகைய முறையற்ற முறைகேடான செயல்களினால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே இந் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் மீது அவர் இந்நகர்மன்றத்திற்கு தலைவராக பதவி வகிக்க தகுதியில்லாத நபர் என கருதி அவர் மீது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மனம் கொண்டு வருகிறோம். ஏனவே மேற்படி நம்பிக்கையில்லா தீர்மனத்தினை அரசு விதிகளை பின்பற்றி உடனடியாக செயல்படுத்திட கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.