’தொடர் கொலைகள் எதிரொலி’- நெல்லை விரைந்த சைலேந்திரபாபு...! ஆடியோ வெளியிட்ட எஸ்.ஐ...!
’’உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அருணாச்சலம் என்பவர். தான் 10 மாதங்களாக விடுப்பு அளிக்காமல் பணியாற்றப்பட வைப்பதாக கூறி வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு’’
நெல்லை அருகே கீழசெவல் நயினார்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (38). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் முன்னீர் பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல் சங்கரசுப்பிரமணியனின் தலையை கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். சங்கரசுப்பிரமணியன் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பழிக்குப்பழியாக தலையை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
நெல்லை, தென்காசியில் கடந்த சில மாதங்களில் 28 கொலைகள் நடந்துள்ளன. இம்மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன. போலீஸ் இன்பார்மர்கள் எனப்படும் தகவலாளிகள் தரும் தகவல்களையும் இப்போதெல்லாம் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. சில உள்ளூர் அதிகாரிகள் தவறு செய்வதை சொல்லாமல் தனிப்பிரிவினர் அமைதி காக்கும் சூழலில் தகவலாளிகள் உயர் அதிகாரிக்கு சொன்னால், குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரிக்கே மீண்டும் தகவல் வந்துவிடுவதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர். உள்ளூர் போலீசார் பெரும்பாலும் அடிதடி தகராறுகளை கட்டப்பஞ்சாயத்தில் முடிக்க நினைக்கின்றனர். அவற்றில் சில கொலையிலும் முடிந்து விடுகிறது. சட்டப்படியாக வழக்குப்பதிவு செய்தால் பெரும்பாலும் கூடுதல் குற்றம் நிகழாமல் தடுக்கலாம் என்பது சில அனுபவமிக்க ஏட்டுகளின் கருத்து.
உள்ளூர் போலீசாரின் தில்லுமுல்லுகளை கூட மேலிடத்துக்கு சொல்ல வேண்டிய தனிப்பிரிவினர் இப்போது அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு உண்மை தகவல்களை மேலே செல்லாதவாறு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். முன்பெல்லாம் பொதுமக்களின் தொலைபேசி தகவல்களை உயர் அதிகாரிகள் அக்கறையுடன் கேட்டு செயல்பட்டனர். நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், முன்பெல்லாம் 506 (2) போன்ற சில பிரிவுகளுக்கு நீதிமன்றத்தில் உடனடியாக பிணையில் விடமாட்டார்கள். ஆனால், இப்போது 307, 302 போன்ற சில பிரிவுகளை தவிர மற்றவற்றுக்கு எளிதில் ஜாமீன் கிடைத்து விடுகிறது. இதனால் குற்றம் செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் கூட பயமின்றி புதிய முயற்சியில் இறங்கி விடுகின்றனர் என்றனர்.
நெல்லை சரக டிஐஜி பதவி பல மாதங்களாக காலியாக உள்ளது. இதை நிரப்பாததால் உயர் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட உண்மை தகவல்களை மேலே கொண்டு செல்ல முடியவில்லை என பலரும் அங்கலாய்க்கின்றனர். எனவே, டிஐஜி பணியிடத்தை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்மட்ட போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லைக்கு வருகை தந்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு :
தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள், மேலும் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குளே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு, குறித்த அனைத்து தகவல்களும் டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் காதிற்கு செல்ல இது குறித்து விசாரிக்க நெல்லை மாவட்டத்திற்கு விரைந்துள்ளார். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளையும் வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று காலை நெல்லைக்கு வந்த நிலையில் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அருணாச்சலம் என்பவர். தான் 10 மாதங்களாக விடுப்பு அளிக்காமல் பணியாற்றப்பட வைப்பதாகவும், எனது பிறந்த நாள் , திருமண நாளில் கூட நான் விடுப்பு இல்லாமல் பணியாற்றி வருகிறேன். எனது குழந்தையோடு நேரம் செலவிட முடியவில்லை. போதிய ஓய்வோடு எனது பணிகளை நான் கவனித்த பொது மிகவும் உற்சாகமாக பணியாற்றினேன் ஆனால் ஓய்வில்லாமல் உழைக்கும் போது மிகவும் மன இறுக்கத்தில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தனது கஷ்டத்தை ஒரு ஆடியோவாக பதிவு செய்து வெளியியிட்டுள்ளார் . இதுவும் சைலேந்திரபாபு கவனத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .