நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..
வீடு இடிந்து குழந்தை பலி, விவசாய நீரில் மூழ்கிய பயிர்கள், ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் என நெல்லையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

நெல்லை மாவட்டம் களக்காடு கீழபத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சூர்யாவிற்கு 2 பெண் குழந்தையும் ஒரு பையனும் உள்ளனர். நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று அதிகாலை வீட்டின் பின்பக்க சுவர் திடீரென இடிந்து வீட்டிற்குள் விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை அருள் பேபி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் குழந்தை அருள் பேபி படுகாயமடைந்தாள். அவரது தாய் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை அருள் பேபி பரிதாபமாக உயிரிழந்து. இதுகுறித்து களக்காடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல களக்காடு நெட்டேரி அருவியில் பெய்த கனமழை காரணமாக நாங்குநேரியான் கால்வாய்யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, முன்னதாக தீபாவளி பண்டிகையொட்டி நாங்குநேரியான் கால்வாய் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பெண் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாதவாறு களக்காடு - சிதம்பராபுரம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி வீரான்குளம் உடைந்ததில் ஊருக்குள் புகுந்த வெள்ளம் புகுந்தது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இது குறித்து நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தும் அவர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறி ஆத்திரத்தில் பொதுமக்கள் ஏர்வாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி வழியாக அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது, அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது,
களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக களக்காடு , மூங்கிலடி , ஏர்வாடி , சிறுமளஞ்சி , ஆனைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வீணானது, இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்ததோடு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை செய்து வரும் சூழலில் களக்காடு தலையணை அருவி, நம்பி கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது, தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தலையணை அருவிக்கு பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

