ஆயுத பூஜையை முன்னிட்டு நெல்லையில் கடைவீதிகள், கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சரஸ்வதி தேவியை கொண்டு விழா நிறைவுப் பெறுவதால் அந்த இறுதி நாள் 'சரஸ்வதி பூஜா' என அழைக்கப்படுகின்றது.
இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழாவாகும். இவ்விழா இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் இந்துக்களால் ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிப்படுவர்.. அவ்வாறு சரஸ்வதி தேவியை கொண்டு விழா நிறைவுப் பெறுவதால் அந்த இறுதி நாள் ”சரஸ்வதி பூஜா” என அழைக்கப்படுகின்றது. மேலும் கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணக்கிடும் திருநாளே ”சரஸ்வதி பூஜை” ஆகும்.. நவராத்திரி கடைசி நாளான இன்று சரஸ்வதி பூஜையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் காலை முதலே பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் கடைகளில் திரண்ட வண்ணம் உள்ளனர். பூஜை பொருட்கள் மட்டுமின்றி காய்கறி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை வீடுகளில் மட்டுமின்றி அலுவலகங்கள், வணிக நிறுவனங்களிலும் கொண்டாடுவது வழக்கம். இதற்கான பூஜை பொருட்களான அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பூஜை பொருட்களின் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இல்லாத நிலையில் விற்பனை என்பதும் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளை மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் களை கட்டி காணப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையானது மும்மரமாக நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜையையொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் சாலையில் திரண்டதால் நெல்லை சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் வகையிலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நெல்லை டவுன் கீழகர வீதியில் விஜய சரஸ்வதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த இந்து திருக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வித்யா ஹோமமும், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வைத்து சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்