(Source: ECI/ABP News/ABP Majha)
தகாத வார்த்தைகளால் திட்டிய கல்லூரி முதல்வர்? - தற்கொலைக்கு முயன்ற மாணவி
"இச்சம்பவம் தொடர்பாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தற்கொலைக்கு தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கல்லூரியின் முதல்வர் & முதல்வரின் உதவியாளர் மீது வழக்கு பதிவு"
நெல்லை மாவட்டம் கரைச்சுத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது மகள் ஷர்லிபிரமில்டா( 19 ), இவர் நெல்லை மாவட்டம் திடியூர் அருகே உள்ள PSN கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு +2 வில் 450 க்கு மேல் மதிப்பெண் எடுத்ததால் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தங்களது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி நேற்று கல்லூரி முதல்வர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அலுவலகம் இருந்த முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் இடுப்பு மற்றும் காலில் எலும்புகள் உடைந்து தற்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கூறும் பொழுது, "பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் கட்டணம் எதுவும் வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த கல்லூரியில் என்னை சேர்த்தார்கள். ஆனால் முதல் செமஸ்டர் முடிந்ததும் ஹாஸ்டல் கட்டணம் என 18 ஆயிரம் ரூபாயும் செமஸ்டர் ஃபீஸ் என 5 ஆயிரம் ரூபாயும் பணம் கட்ட சொன்னார்கள். என்னால் முடியாது என்று சொன்னேன். என்னை இந்த கல்லூரியில் சேர்ப்பதற்கு அனுமதி அளித்த ஆசிரியரை அழைத்துவரச் சொன்னார்கள். ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் அப்போது அந்த பிரச்சினை ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா என்பவர் என்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்தார். எனது செல்போன் நம்பரை கேட்டார். என்னுடன் செல்போனில் பேசினால் கல்லூரிக்கான பீஸ் ஏதும் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறி தொந்தரவு செய்தார், கல்லூரியில் மற்ற சகோதரரிடம் பேசினால் தவறாக என்னை சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் சிவா பேசியுள்ளார். கல்லூரி முதல்வர் என்னை அழைத்து நான் மரியாதையுடன் சகோதரர்களிடம் பழகி பேசியதை பாலியல் ரீதியாக தவறாக சித்தரித்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் என்னை கல்லூரி முதல்வர் மன்னிப்பு கடிதமும் எழுத சொன்னார், அதை எழுதி கொடுத்தேன்,
இருப்பினும் நான் செய்யாத தவறை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவறாக பழகியதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினேன். நான் கல்லூரி கட்டணம் செலுத்தாததையும் சேர்த்து கூறி திட்டியதுடன் உனக்கு டிசி வழங்குகிறேன், அதில் மோசம் என்று சுட்டிக்காட்டி வழங்குகிறேன் என கூறினார். இதனை தாங்கி கொள்ள முடியாத மன வேதனையில் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தேன். எனது இந்த நிலைமைக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் உதவியாளர் சிவா இருவருக்கும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
கல்லூரி கட்டணம் செலுத்தாததை ஏளனமாக பேசி உள்ளனர். அதோடு மற்ற மாணவர்களிடம் பேசுவதை தகாத வார்த்தையில் கூறி திட்டி உள்ளனர். அவ்வாறு தவறாக பேசியிருந்தால் எங்களிடம் தெரிவித்து இருக்கலாம் அதை விடுத்து எனது மகளை இந்த நிலைக்கு தள்ளி உள்ளனர், இந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதோடு அடிபட்டு கிடந்த எனது மகளை அங்கிருந்து ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர், இதனை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, என மாணவியின் தந்தை வேதனை தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தற்கொலைக்கு தூண்டுதல் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் கல்லூரியின் முதல்வர் & முதல்வரின் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது,
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060.