நெல்லை : பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்..
”நெல்லையில் கல்குவாரிகள் குறித்து சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிக்கை விரைவில் அளிக்கப்படும்” - ஆட்சியர் விஷ்ணு
நெல்லை மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களை தடுக்கும் வகையிலிலும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாபநாசம் அணையின் பாசன கால்வாய்களாக உள்ள மாவட்டத்தின் பிரதான கால்வாய்களான பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் ஆகிய கால்வாய்களை தூர்வாரும் பணி இன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு நெல்லை டவுணில் இந்த பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறும் பொழுது,
”மாவட்டத்தின் பிரதான கால்வாய்களான பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் ஆகிய கால்வாய்களுக்கான தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. 950 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட பாளையங்கால்வாய் 42 கிலோ மீட்டரும், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்ட கோடகன் கால்வாய் 24.6 கிலோ மீட்டரும், 6410 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட திருநெல்வேலி கால்வாய் 28.4 கிலோ மீட்டரும் தூர் வாரப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 21, 910 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. கடந்த மழையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழைக்கு முன்பாக தூர்வாரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பணி போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும்.
கால்வாய்கள் தூர்வாரப்படுவதால் இந்த ஆண்டு மழைக்கு நெல்லை மாநகராட்சி பகுதியில் வெள்ள பாதிப்பு இருக்காது. மேலும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும், மக்கள் கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவது பெரும் சவாலாக உள்ளது மாநகராட்சி மூலம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கல்குவாரிகள் குறித்து சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிக்கை விரைவில் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்