தமிழகத்தை பார்த்துவிட்டு முதல்வர் அமெரிக்கா சென்றிக்கலாம் - திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்
”அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலை திறப்பதற்கு வெறும் 27 கோடி இருந்தால் போதும். 50 ஆயிரம் தொழிலாளர்கள், 5 லட்சம் விவசாயிகள் நன்மையடைவார்கள்”
புலித்தேவன் 309 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், அதிமுக சார்பில் புலித்தேவன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர போராட்டத்திற்கு தியாகம் செய்த மாவீரனை நினைத்து எல்லோரும் வணங்கி வந்திருக்கிறோம். கார் பந்தயம் நடைபெறுவது குறித்து மத்திய இணையமைச்சர் முருகனே சொல்லியிருக்கிறார். இதற்கென்று தனியாக இடம் இருக்கிறது. அங்கு நடத்தலாம். குருகிய இடத்தில் நடத்துவது சிறப்பில்லை என சொல்லியிருக்கிறார்.
எங்களது கருத்தும் அதுவாக தான் இருக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது நாங்கள் எது சொன்னாலும் செவிடன் காதில் ஊதும் சங்கு போன்று தான் இருக்கும். 2026 இல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இந்த மணிமண்டபத்தை கட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் பொழுது கடம்பூர் ராஜூ இங்கு செய்தாரோ அதே போல் மக்கள் எதிர்பார்க்கும் அத்துனை திருத்தங்களும் செய்வோம் என்றார்.
மேலும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு உதாரணமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் முதல் தினசரி நடக்கும் கொலை, கொள்ளை என அனைத்தையும் சொல்லி மோசமான ஆட்சி பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பதாக தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் சட்ட ஒழுங்கை சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை, போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கன்னித்தீவு போல போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் அதற்கு உதாரணம். இதனை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலை திறப்பதற்கு வெறும் 27 கோடி இருந்தால் போதும். 50 ஆயிரம் தொழிலாளர்கள், 5 லட்சம் விவசாயிகள் நன்மையடைவார்கள். ஆனால் அதை திறக்காமல் அவர் அமெரிக்காவில் போய் தொழில் முதலீடு பெறுவது என்பது எவ்வாறு சாத்தியம், தமிழகத்தில் மூடி இருக்கும் தொழிற்சாலைகளை திறந்தாலே ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், இங்கு பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றிருந்தால் நல்லது அவர் வெள்ளையறிக்கை கொடுக்கட்டும் பார்த்துக் கொள்வோம் எனவும் அவர் விமர்சித்தார்.