2030க்குள் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயரும்! பன்னாட்டு அரசுகளுக்கான குழு எச்சரிக்கை - அமைச்சர் மெய்யநாதன் பகீர் தகவல்
தற்போது 1200 ஆண்டுகளில் சராசரியாக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ்க்கு உள்ளாக வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை ஐபிசிசி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தின் 244 வது ஆண்டு விழாவை ஒட்டி நெல்லை டக்கரம்மாள்புரத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து மரக் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலைமை உரையாற்றிய சபாநாகர் அப்பாவு, 1935- ஆண்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே கல்வி பயிலும் வாய்ப்பு இருந்தது. எல்லோரும் நிலம் வாங்க முடியாது. ஆனால் இந்த நிலையை மாற்றியவர்கள் திருச்சபையினர்தான்.
குறிப்பாக சாராள்டக்கர், எமிக்கார்மிக்ஸ், பிளாரன்ஸ், ஆஷ்வித் ஆகிய நான்கு பேரை மறக்க முடியாது. பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என பெயர் வர காரணமாணவர்கள். இவர்கள் கல்விக்காவும், சமூக நீதிக்காகவும் அரும்பாடுபட்டார்கள். அந்த சமூக நீதியைத்தான் இன்று நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
உலக மொழிகளில் மூத்த மொழி தமிழ்தான் என்று ஆராய்ந்து கூறியவர் கால்டுவெல், அதோடு மட்டும் அல்லாமல் திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் தந்தவர். இவரின் உழைப்பே தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைக்க காரணம். அந்த செம்மொழி அந்தஸ்த்தை பெற்றித்தந்தவர் கலைஞர் என பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் விதமாக தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அதிக பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பளவு 1,40,000 சதுர கிலோமீட்டர். இதில் தற்போது 32 ஆயிரம் சதுர கிலோமீட்டர் மட்டுமே வனப்பரப்பாக உள்ளது.
33 சதவீதம் வனம் இருக்க வேண்டும் என்பது நீதியின் கோட்பாடு. அதன்படி 43 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆவது வனப்பரப்பு இருக்க வேண்டும். 11 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வனப்பரப்பை அதிகரிக்கும் சூழல் தற்போது உள்ளது. மனித இனம் வாழ பூமி மட்டுமே இயற்கையால் நமக்கு கிடைத்திருக்கிறது.
அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட வேண்டும். 2001 ஆண்டு கணக்கின்படி வாகனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 50 லட்சமாக இருந்தது. தற்போது மூன்று கோடியே 10 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனை கட்டுப்படுத்த மரங்களை நடவு செய்தால் மட்டுமே முடியும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் தேவைப்படுகிறது. பேரிடர்களை தடுக்கும் ஆற்றல் மரத்திற்கு மட்டுமே உள்ளது. இயற்கையை பாதுகாக்க தவறியதால் ஏற்படும் விளைவுகளை தற்போது நாம் கண்கூடாக சந்தித்து வருகிறோம்.
வட மாநிலங்களில் மட்டுமே புவி வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலை பாதிப்புகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது தமிழகம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாண்டும் போது வெப்பஅலை வீசி பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனையும் நாம் இப்போது சந்தித்து வருகிறோம். தமிழக சட்டப்பேரவையில் வெப்ப அலை பாதிப்பை தமிழக அரசு பேரிடராக அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுகளுக்கான குழு 2022 ஆம் ஆண்டு எச்சரிக்கை ஒன்றை அறிக்கையாக கொடுத்தது. 2030 ஆம் ஆண்டுக்குளாக தற்போது 1200 ஆண்டுகளில் சராசரியாக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ்க்கு உள்ளாக வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை ஐபிசிசி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டைச் சுற்றி வேப்பமரம், முருங்கை மரம், பப்பாளி உள்ளிட்டவைகள் அவசியம் இருக்க வேண்டும். வீட்டின் அருகே இடமிருந்தால் வாழை, தென்னை, எலுமிச்சை, கருவேப்பிலை போன்ற மரங்களை அதிகம் நடவு செய்ய வேண்டும். வீட்டிற்கு அருகே அதிகம் இடம் இருந்தால் நெல்லிக்காய், சீதாப்பழம், மாமரம் போன்ற மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை நாம் நேரடியாக உணர்ந்தோம்.
அரசமரம், ஆலமரம் நடவு செய்யப்பட்ட இடங்களில் ஆக்ஸிஜன் அளவு 25 சதவீதங்களுக்கு மேலாக உள்ளது. மூங்கில் காடுகள் இருக்கும் பகுதிகளில் 28 சதவீதத்திற்காக மேலாக ஆக்ஸிஜன் அளவு இருந்து வருகிறது. மரம் நடுகிறோம் என்ற பெயரில் குனிந்து நடும் மரங்களை இனிமேல் நாம் நடக்கூடாது 10 அடி உயரத்தில் உள்ள மரக்கன்றுகளை நடவு செய்தால் மட்டுமே 90% மரங்கள் பாதிப்படையாமல் வளரும்.
நவீன உலகத்தில் நாம் வாழ்கிறோம். காலமில்லாமல் பற்றாக்குறையால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இயற்கையை பாதுகாக்க வேண்டும். நமக்காக மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்காகவும் கண்டிப்பாக அதனை கடைபிடிக்க வேண்டும். 10 லட்சம் மரக்கன்றுகளையாவது நெல்லை மாவட்டத்தை சுற்றிலும் நடுவதற்கான முயற்சிகளை இன்றிலிருந்து நாம் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.