(Source: ECI/ABP News/ABP Majha)
முத்தமிழ் அறிஞருக்கு பாளை மத்திய சிறையில் அடையாளச் சின்னம் - அமைச்சர் ரகுபதி
'மதுரை சிறையில் 100 கோடி ஊழல் என்று கூறப்படுகிறது, ஆனால் அந்த அளவிற்கு அங்கு வருவாய் இல்லை, இருந்த போதும் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது, அதற்கான விளக்கம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் கைதிகளின் அறைகள், உணவுக் கூடம், கைதிகள் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் கூடம், விவசாய நிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள் குறித்தும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும் பொழுது, முதல்வர் உத்தரவுப்படி இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டோம். அங்கு விசாரணை கைதி, தண்டணை கைதி என 1378 கைதிகள் உள்ளனர், 1332 கைதிகளுக்குத்தான் இடம் உள்ளது. கூடுதலாகவே கைதிகள் உள்ளனர். கைதிகளுக்கான அடிப்படை வசதி, தரமான உணவு, பாதுகாப்பு வசதி, நவீன மருத்து வசதி சிறைக்குள்ளேயே கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இங்கேயே பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. அதில் கிடைக்கும் வருவாய் சிறைவாசிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறைக்கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. தென்காசி உள்ளிட்ட புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்நீதி மன்றத்தில் கருத்துரு பெற்று விரைவில் மாவட்ட தலைமை நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிபதிகள் காலிப்பணியிடம் என்பதை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் ஒரு நியமன குழு உள்ளது. அவர்கள் தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்வார்கள், அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும்.
மதுரை சிறையில் 100 கோடி ஊழல் என்று கூறப்படுகிறது, ஆனால் அந்த அளவிற்கு அங்கு வருவாய் இல்லை, இருந்த போதும் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதற்கான விளக்கம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று மின் திருட்டு சிறைகாவலர் குடியிருப்புகளில் நடந்தாக கூறப்படுகிறது. மின் திருட்டு நடைபெறவில்லை. அதிகமாக செலவாகியுள்ளது. அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் நவீன வசதியுடன் இருக்க வேண்டும், திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும், கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆகையால் நவீன வசதியுடன் பல இடங்களில் சிறைச்சாலைகள் புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கே முன்மாதிரியாக எப்படி புழல் சிறை உள்ளதோ, அதை போல இன்னும் கூடுதல் வசதிகளை கொண்ட சிறைச்சாலை உருவாக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் விருப்பம். சிறைச்சாலை என்பது கைதிகளை திருத்துவதற்கே தவிர அவர்களை தண்டிப்பதற்கு அல்ல. இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் குறைவாக உள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வரியம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருந்த சிறைச்சாலை இது அவர் இருந்த பகுதியை பார்வையிட்டோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் முதல்வர் அனுமதியுடன் ஏதாவது ஒரு அடையாளச் சின்னம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்