நெருங்கும் பொங்கல் திருநாள் - மண் எடுக்க நீடிக்கும் தடையால் மண்பாண்ட தொழிலாளர்கள் அவதி
’’நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இலவச மண் எடுக்க தடை நீடித்து வருவதால் மண்பாண்டம் செய்ய முடியாத நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை’’
மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு ஆண்டுக்கு 80 யூனிட் மணல் இலவசமாக எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண்ணெடுத்து மண்பானைகள், அகல் விளக்குகள், உண்டியல், அடுப்பு, தெய்வத் திருவுருவங்கள், பொம்மைகள் போன்ற மண்பாண்ட பொருட்கள் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வருகின்றனர். இந்த சூழலில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மண் பண்டங்களை எடுத்துக் கொண்டு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறும் பொழுது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மண்பாண்ட தொழில் நலிவடைந்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, இதனால் எவ்வித வருமானமும் இன்றி மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததாக கூறப்பட்டது, இதனால் மண்பாண்டத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
ஆனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆயிரத்து 56 பேர் மட்டுமே மழைக்கால நிவாரணம் வழங்க பட்டுள்ளது. மீதமுள்ள தொழிலாளர்கள் கதர் கிராம தொழில் வாரிய அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் இதுவரை எந்தவித நிவாரணம் கிடைக்கப் பெறாமல் தவித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். மேலும் மீனவர்களுக்கு தமிழக அரசு மழைக்கால நிவாரணம் வழங்குவதைப் போன்று தங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை நிவாரணம் வழங்கிட வேண்டுமென திருநெல்வேலி மாவட்டம் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர், மேலும் நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் மண்பானைகள் உள்ளிட்ட மண்ணாலான பொருட்கள் செய்வதற்கு குளத்து மண் கிடைக்காமல் தவித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்,
தமிழகம் முழுவதும் இலவசமாக குளத்து மண் எடுத்து மண்பாண்டத் தொழில் செய்ய அரசாணை இருந்தும் நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இலவச மண் எடுக்க தடை நீடித்து வருவதாகவும், மழை காலங்களில் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாக இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டம் செய்ய போதுமான மண் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களுடன் வந்து மனு அளித்து சென்றனர்..