தூத்துக்குடி : டூவிபுரத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..
தூத்துக்குடி மாநகரில் கடந்த வாரம் அண்ணாநகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி டூவிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். பெயிண்டர் தொழில் செய்து வரும் இவருக்கும் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சுடலை மணிக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொன்மாரி என்ற மகளும் ஏழாம் வகுப்பு படிக்கும் சிவா என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு சுடலைமணி உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இரு பிள்ளைகளும் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.
சுரேஷ் மட்டும் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். சுரேஷின் தாயார் ஆனந்தி அண்ணா நகரில் வசித்து வருகிறார் ஆனந்தி தினமும் சுரேஷ் வீட்டுக்கு காலையும் பிற்பகலிலும் உணவு கொண்டு கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்று காலை உணவு கொடுத்துவிட்டு வந்துள்ளார்.அப்போது அவர் கதவை திறக்கவில்லை, மதியம் வந்து பார்க்கும்போது சாப்பாடு அப்படியே இருந்து உள்ளது. இதனையடுத்து ஏன் கதவை திறக்கவில்லை என்ற அச்சத்தில் அவர் பார்த்தபோது வீட்டின் நடு அறையின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் தலைமையிலான அலுவலர்கள் வந்து உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தாய் ஆனந்தி கூறுகையில், ”சுரேஷ் இந்த வீட்டுக்கு வந்து பத்து தினங்கள்தான் ஆகிறது வீடு ரொம்ப மோசமா இருக்கு வேற வீடு பாருன்னு சொன்னேன். குறைந்த வாடகை என்பதால் இந்த வீட்டில் வசித்து வந்தார். ஏற்கனவே தாயை இழந்த பிள்ளைகள் தற்போது தகப்பனையும் இழந்து தவிக்கின்றனர். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என்கிறார்.
சம்பவத்தை தூத்துக்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஷ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி நகரில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாக 50 ஆண்டுகள் பழைய, பலவீனமான வீடுகள் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் கடந்தாண்டு ஜனவரி மாதம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்தார், கடந்த 2015-ஆம் ஆண்டு தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாநகரில் கடந்த வாரம் அண்ணாநகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.