எங்க சித்தப்பா யார் தெரியுமா ரிப்போட்டரு...! - கஞ்சா போதையில் போலீஸிடம் அலப்பறை செய்த பிரதர்ஸ்
'எம்பாக்கெட்டுல இருந்து கஞ்சா எடுத்திங்களா' நான் யார் தெரியுமா,எங்க சித்தப்பா ரிப்போர்ட்டரு, நான் ஈசியா வெளிய வந்துருவேன்'
கமுதி அருகே சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் சண்முகவேலிடம் கஞ்சா போதையில், கத்தியுடன் சுற்றித்திரிந்த சகோதரர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் கஞ்சா போதைக்காக ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து 367 கொலைகளை சிறுவர்கள் மட்டும் செய்துள்ளனர். இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இளஞ்சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் டெல்லி முதல் இடத்திலும், குஜராத் 2வது இடத்திலும், 3வது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் தமிழகம் உயர்ந்து இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், மதுரை நகரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை புறநகர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் சரகத்திற்குட்பட்ட மண்டலமணிக்கம் காவல் நிலைய போலீசார் சின்ன உடப்பங்குளம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி இரண்டு இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு வாகனத்திற்கு வழி விடாமல் ரகளை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு சென்ற போலீசார் இளைஞர்களை ஏன் நடுரோட்டில் நின்றுகொண்டு வாகனங்களுக்கு வழி விடாமல் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்க அவர்கள் போலீசாரிடம் ரகளையில் செய்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்த மண்டலமாணிக்கம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் விசாரிக்கும்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது. 'கஞ்சா குடிச்சிட்டு தகராறு பண்ணாதீங்கப்பா' என்று கண்டித்துள்ளார். அவரிடம் என் பாக்கெட்டில் இருந்து நீங்கள் கஞ்சா எடுத்தீர்களா, கத்தி வைத்திருந்தால் கைது செய்வீர்களா, நான் யாரையும் குத்தவில்லையே, என் சித்தப்பாவும் நிருபர் தான்...நான் அவர வச்சி ஈசியா வெளிய வந்துருவேன், 'உங்களை சும்மா விடமாட்டேன்' என்று போலீசாரிடம் மல்லுக்கட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரகளையில் ஈடுபட்ட சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார், வினோத் ஆகிய இரண்டு சகோதரர்களையும் மண்டலமணிக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் போதையில் சாலையை மறைத்து ரகளை செய்தவர்களை கண்டித்த காவல்துறை அதிகாரியிடம், 'என்னை முடிந்தால் கைது செய்து பார், "கத்தி வைத்திருந்தால் அரஸ்ட் பண்ணுவீங்களா, நான் ஈசியா வெளியே வந்து டுவேன், உங்களை சும்மா விட மாட்டேன்" என்றெல்லாம் கஞ்சா போதையில் இருந்த ரவுடிகள் பேசியிருப்பது பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தை இப்படியே கடந்து செல்ல முடியாது. ஏனென்றால், கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடு திருடி சென்றவர்களை 15 கிலோமீட்டர் வரை தனது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதியின் ஈரம் இன்னும் காயவில்லை. அதேபோல 2 இளைஞர்கள், கஞ்சா சோதனை செய்த ஒரு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளriடம் உங்களை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டிய சம்பத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. எனவே, காவல் துறையும் சட்டமும் இவர்களைப் போன்ற கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்களையும் ரவுடிகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஏனென்றால் காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனால் சாமானிய மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.