உதயநிதி கூறியதை பாஜக இந்து மதத்திற்கு எதிராக கூறியதாக திரித்து வருகின்றனர் - கே.எஸ் அழகிரி
ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை சொல்லி இனவெறியை தூண்டி, பாரதிய ஜனதா கட்சி வாக்கு வங்கியை பெற சனாதனத்தை பெரிதாக்கி வருகின்றனர்.. உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை.
![உதயநிதி கூறியதை பாஜக இந்து மதத்திற்கு எதிராக கூறியதாக திரித்து வருகின்றனர் - கே.எஸ் அழகிரி BJP is distorting what he said about Udayanidhi Sanathana as a comment against Hinduism says KS Alagiri TNN உதயநிதி கூறியதை பாஜக இந்து மதத்திற்கு எதிராக கூறியதாக திரித்து வருகின்றனர் - கே.எஸ் அழகிரி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/c1f3accfbfe62442e1f514ec7319ced41693842226971571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிய கருத்து பாரதிய ஜனதா கட்சியை அலற விட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் சொல்லிய கருத்தைத்தான் உதயநிதி ஸ்டாலினும் கூறியுள்ளார். சனாதனத்திற்கு எதிரான கருத்து என்பது இந்து மதத்திற்கு எதிரான கருத்து அல்ல. பாரதிய ஜனதாவிற்கு இருண்டதெல்லாம் பேய் என்ற ஒரு அச்ச உணர்வு வந்துள்ளது.
எனவே அவர் சனாதனத்தை பற்றி பேசியதை பாரதிய ஜனதா இந்து மதத்திற்கு எதிராக கருத்து கூறியதாக திரித்து கூறி வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தின் மீது அதிக பற்று கொண்ட ராமானுஜர் சனாதனத்திற்கு எதிரான கருத்தை சொல்லியுள்ளார். தீண்டாமைக்கு எதிராக செயல்பட்டு புரட்சி செய்தவர் ராமானுஜர். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் சனாதன எதிர்ப்பு இதற்கு பாரதி ஜனதா கட்சி அச்சப்பட, அலறி அடிக்கத் தேவையில்லை. இதுபோன்று வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மதம் என்னும் பேய் பிடிக்காது இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். பகுத்தறிவு வரவேண்டும் என சொல்வது தவறானது இல்லை, மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிராக போராடியுள்ளார் சுவாமி விவேகானந்தர். மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென கூறியுள்ளார். சனாதனம் என்பது நிலையானது என்று சொல்கிறது. ஆனால் அறிவியல் படி பிரபஞ்சத்தில் நிலையானது என்பது எதுவும் கிடையாது. எல்லாம் மாறிக்கொண்டு இருக்கிறது. அதை தான் உதயநிதி சொன்னார். இதில் அச்சப்பட, அலறி அடிக்க, இவ்வளவு வசவுகள் சொல்ல என்ன இருக்கிறது.. தேர்தல் வருகிறது என்பதற்காக பேசுகிறீர்களா? பேரறிஞர் அண்ணா இதனை இன்னும் நாசுக்காக சொன்னார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். இதனை சனாதத்திற்கு எதிர்ப்பாக கூற முடியாது. சமூகத்தில் மாற்றம் வேண்டும் என்பதும் கொடுமைகள் அகல வேண்டும் என்பதும் பிற்போக்கானது அல்ல. தமிழ் மண் என்பது நீண்ட காலத்திற்கு முன்பே போராடி வெற்றி பெற்ற மண், இதில் ஆன்மீகவாதிகளும், சீர்திருத்தவாதிகளும் உயர்ந்த கருத்துக்களை சொல்லி மக்களை பக்குவப்படுத்திய மண் இது. இதற்கு போய் அமித்ஷா இவ்வளவு அலற வேண்டியது அல்ல, இதை சொல்லி வட புலத்தில் இருக்கும் மக்களை திமுகவும், காங்கிரசும் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று திசை திருப்ப பார்க்கிறார்கள். தேர்தல் வந்துவிட்டது, வெற்றி பெற வேண்டும், ஆகவே ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை சொல்லி இனவெறியை தூண்டி, பாரதிய ஜனதா கட்சி வாக்கு வங்கியை பெற சனாதனத்தை பெரிதாக்கி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அதில் நியாயம் இருக்கிறது. சனாதனத்தை சீர்திருத்த வேண்டும், பகுத்தறிவு வேண்டும் என்று கூறுவது இந்துக்கு எதிர்ப்பானதல்ல.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வரும் சர்வாதிகார நடவடிக்கை. நம் நாடு பல மொழி கலாச்சாரம், பண்பாடு என பன்முக தன்மை கொண்ட நாடு, இங்கு நாடு தழுவிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். யாரையும் கேட்காமல் அதிபர் முறையை ஹிட்லர், முசோலினி போல் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். பாரதிய ஜனதா ஊழலற்ற ஆட்சி செய்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்த ஊழலை சிஏஜி அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது. எனவே இவர்கள் மற்றவர்களை பத்தி பேச அருகதை இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்ற நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)