தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி அமலிநகர் மீனவர்கள் பந்தல் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இராமநாதபுரம் வரும் போது மிகப்பெரிய வலுவான போரட்டத்தை நடத்துவோம்
தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் ஆறாவது நாளாக போராட்ட பந்தல் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமளி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூடிய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடரந்து 2022 -ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வள மானிய கோரிக்கையில் ரூ 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மீன்வளத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்திய போதும், இதுவரையில் தூண்டில் வளைவுப்பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மீனவர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அமலிநகர் மீனவர்கள் காத்திருக்கும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், கூட்டுப் பிரார்த்தனை, உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் ஆறாவது நாளாக அமலிநகர் மீனவர்கள் போராட்ட பந்தலில் அமர்ந்து தூண்டில் வளைவு பாலம் கேட்டு கோஷம் எழுப்பினர். போராட்ட பந்தல் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், “தூண்டில் வளைவு பாலம் அமைப்பது தொடர்பாக கடந்த2023 பிப். 23ம்தேதி அன்று தூத்தக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த வாக்குறுதியும், கடந்த 2023 ஏப். 14ம் தேதி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்விஷயத்தில் முதல்வரின் உத்திரவாதத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாக அமலிநகர் ஊர் நலக்கமிட்டி மற்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.மேலும் காலம் தாழ்த்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இராமநாதபுரம் வரும் போது மிகப்பெரிய வலுவான போரட்டத்தை நடத்துவோம்” என தெரித்துள்ளனர்.